தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) தலைவராக உள்ள கிரெக் பார்கிலேவின் பதவி காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. 2020 நவம்பரில் ஐசிசி-யின் தலைவராக தேர்வான கிரெக் பார்கிலே, 2022-ஆம் ஆண்டு எவ்வித எதிர்ப்பும் இன்றி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தனது பதவிக்காலம் முடிந்தவுடன் ஐசிசி தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக கிரெக் பார்கிலே அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து, அப்பதவிக்கு தேர்தல் நடத்த ஐசிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்பும் இயக்குனர்கள், தங்கள் வேட்புமனுவை ஆகஸ்ட் 27-க்குள் தாக்கல் செய்யலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டால் தேர்தல் நடத்தப்படும் என்றும், புதிதாக தேர்வாகும் ஐசிசி தலைவரின் பதவிக்காலம் 2024 டிசம்பர் 1 முதல் துவங்கும் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஐசிசி தலைவர் பொறுப்புக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2019 அக்டோபரில், பிசிசிஐ செயலாளராக ஜெய்ஷா பொறுப்பேற்றார்.
உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிசிசிஐ அரசியலமைப்பின்படி, ஒரு நபர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் அதிகபட்சமாக 9 ஆண்டுகள் பணியாற்றலாம். இருப்பினும், ஒருவர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் நிர்வாகப் பொறுப்புகளில் தொடர முடியாது. அப்படி ஒருவர் 6 ஆண்டுகள் நிர்வாகப் பொறுப்பில் இருந்தால், 3 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகே பிசிசிஐ நிர்வாகப் பொறுப்புகளில் மீண்டும் இணைய முடியும்.
அதன்படி, 2019 அக்டோபரில் பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்ற ஜெய்ஷா, அக்டோபர் 2025 வரை அந்த பொறுப்பில் தொடரலாம். அதன்பின், கட்டாயமாக நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து 3 ஆண்டுகள் விலகியிருக்க வேண்டும். இப்படியான சூழலிலேயே ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை ஜெய்ஷா ஐசிசி-யின் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், ஐசிசி வரலாற்றில் 35 வயதில் தேர்வான இளம் தலைவர் என்ற பெருமையை பெறுவார்.
மேலும், ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என் ஸ்ரீனிவாசன், ஷஷாங்க் மனோகர் ஆகியோரை தொடர்ந்து, ஐசிசி-யின் தலைவராகவும் 5வது இந்தியர் என்ற பெருமையையும் ஜெய்ஷா பெறுவார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாம்பன் பாலம்: அக்டோபரில் பயணிகள் ரயில்!
சென்னை பல்கலைக்கழகம்: தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
ஹெல்த் டிப்ஸ்: பருமனாக உள்ளவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா?
டாப் 10 நியூஸ் : கொடியை அறிமுகம் செய்யும் விஜய் முதல் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு வரை!