2024ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை ஐசிசி இன்று (ஜனவரி 28) அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனைகளுக்கான பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி 2024-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்படும் என ஐசிசி இன்று அறிவித்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட், டி20 என அனைத்து வடிவிலான போட்டிகளிலும் 31 வயதான பும்ரா தனது அபார பந்துவீச்சால் ஆதிக்கம் செலுத்தினார்.
குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில், குறிப்பாக 8.26 சராசரியுடன், 4.17 என்ற எகானாமிக்கில், 15 விக்கெட்டுகளுடன் முன்னிலை வகித்த பும்ரா தொடர் நாயகன் விருதை பெற்றார்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆவார். அவருக்கு முன்னதாக, ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), ரவிச்சந்திரன் அஸ்வின் (2016) மற்றும் விராட் கோலி (2017,18) இந்த விருதை பெற்றுள்ளனர்.
ஏற்கனவே 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் பும்ரா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.