ஐஎஸ்எல் கால்பந்து இறுதியாட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது மோகன் பகான் அணி.
7வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. மொத்தம் 11 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன.
ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை என ஒவ்வொரு அணியும் 20 முறை லீக் சுற்றுப் போட்டியில் விளையாடியது.
லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவிற்குப் பிறகு புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பெங்களூரு எஃப்சி, ஏடிகே மோகன் பகான், நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எஃப்சி, எஃப்சி கோவா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பெங்களூரு எஃப்சி அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் எஃப்சி கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதே போல ஏடிகே மோகன் பகான் அணி 3-2 என்ற கோல் அடிப்படையில் நார்த்ஈஸ்ட் யுனைடைட் எஃப்சி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
இதனைத் தொடர்ந்து ஐஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (மார்ச் 18) இரவு பதோர்தா நேரு ஸ்டேடியத்தில் தொடங்கியது. முன்னதாக பெங்களூரு எஃப்சி மற்றும் மோகன் பகான் அணிகள் தலா 2 முறை மோதியுள்ளன. இதில் 2 முறையும் பெங்களூரு எஃப்சி அணி மோகன் பகான் அணியை வீழ்த்தியது.
இதனால் இறுதிப்போட்டியில் நிச்சயம் வெற்றி என்ற உறுதியோடும் ரசிகர்களின் நம்பிக்கையோடும் களமிறங்கியது பெங்களூரு எஃப்சி அணி. 2 முறையும் தங்களை வீழ்த்திய பெங்களூரு எஃப்சி அணிக்கு பதிலடி கொடுத்து கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று மோகன் பகான் அணியும் களமிறங்கியது.
எனவே விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இறுதியாட்டத்தின் நேர முடிவில் 2-2 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. மோகன் பகான் அணியில் டிமித்ரி பெட்ராடோஸ் 14-வது, 85-வது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பில் கோலடித்தார். பெங்களூரு எஃப்சி அணியில் சுனில் சேத்ரி 45-வது நிமிடத்திலும், ராய் கிருஷ்ணா 78-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.
போட்டி நேரத்தில் கோல் கணக்கு சமனில் முடிந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆனால் கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் 4-3 என்ற கணக்கில் ஏடிகே மோகன் பகான் அணி பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
மோனிஷா
போராட்டத்தை அறிவித்த போக்குவரத்து பணியாளர்கள்!
நான்காம் தூணே ! நீ நலம் தானா ?