இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று (ஜூலை 23) நடைபெற்ற இரண்டாவது இன்னிங்சில் 34 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 54 ரன்கள் எடுத்தார் இஷான் கிஷன்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தால் காயமடைந்து ஓய்வில் உள்ள இந்திய வீரர் ரிஷப் பண்ட்-ற்கு இஷான் கிஷன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஷான் கிஷன் கூறுகையில்,
”நான் வெஸ்ட் இண்டீஸ் வருவதற்கு முன்னதாக பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA)சில நாட்கள் தங்கி அங்கு பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ரிஷப் பண்ட் அங்கு தனது காயத்திற்கான சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
அப்போது என்னை சந்தித்த அவர் என்னுடைய பேட்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து எனக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். அவருடை அந்த அறிவுரைகள் தான் எனக்கு இந்த போட்டியில் பயன் உள்ளதாக இருந்தது.
அவரது அறிவுரைகள் என்னுடைய பேட்டிங்கில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது.
ரிஷப் பண்ட்-ஐ எனக்கு 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் விளையாடுவதில் இருந்து தெரியும்.
அவருடன் இருந்தது மற்றும் அவருடன் உரையாடியது என அனைத்துமே எனக்கு இந்த டெஸ்ட் போட்டியில் உதவியது. அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.
மேலும், இந்த அரைசதம் மிகவும் முக்கியமானது. இந்திய அணி என்னிடம் இருந்து என்ன எதிர்பார்த்தது என்று தெரியும். 4வது இடத்தில் களமிறங்க விராட் கோலியே யோசனை கூறி எனது ஆட்டத்தை வெளிப்படுத்த அறிவுரை வழங்கினார்.
மழை வந்ததால், கூடுதலாக அதிரடியாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று இஷான் கிஷன் கூறினார்.
அவர் அரைசதம் அடிக்க பயன்படுத்தியது ரிஷப் பண்ட் -டின் பேட் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பாஜக vs காங்கிரஸ் : போட்டா போட்டி போராட்டம்!
மணிப்பூர் விவகாரம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு!