நடப்பு மகளிர் ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோற்று புள்ளிப்பட்டியலில் அதளபாதாளத்தில் இருக்கும் ஸ்ம்ரிதி மந்தனாவின் ஆர்.சி.பி அணிக்கு ’ஈ சாலா கப் நம்தே’- என்று உரக்க கத்துவதற்கு ஒரு ’மெல்லிய’ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் நேற்றுடன்(மார்ச் 13) முடிவடைந்தது.
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றதுடன் வரும் இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் விளையாட தகுதிப்பெற்றுள்ளது இந்திய அணி.
சாதித்த மும்பை… சரிந்த பெங்களூரு
இதனையடுத்து சத்தமில்லாமல் நடைபெற்று வரும் முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் பக்கம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் சென்றுள்ளது.
கடந்த 4ம் தேதி தொடங்கிய மகளிர் ஐபிஎல் தொடர் பாதி கட்டத்தை கடந்து இப்போது விறுவிறுப்பு நிலையை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் 5 ஆட்டங்களை கடந்துள்ள நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இதில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் நிலைமை தான் கவலைக்கிடமாக உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மகளிர் ஐபிஎல் முதல் சீசனில் அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ஸ்மிருதி மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் படுதோல்வியடைந்து ஒரு புள்ளிக்கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி அணியாக மங்கி போய் நிற்கிறது மந்தனாவின் ஆர்.சி.பி மகளிர் அணி.
இதனையடுத்து பெங்களூர் ஆடவர் அணியைப் போன்றே மகளிர் அணிக்கும் ’ஈ சாலா கப் நம்தே’ என்பது அவெர்சனாக மாறி உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மூன்று போட்டிகளிலும் வெற்றி தேவை
அதே வேளையில் மந்தனா தலைமையிலான ஆர்.சி.பி. மகளிர் அணிக்கு எலிமினேட்டர் போட்டிக்கு செல்ல அதிர்ஷ்டத்திலும் ஒரு அரிதான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கு முதலில் தாங்கள் சந்தித்துள்ள 5 போட்டிகளின் அவமானகரமான தோல்விகளை முற்றிலும் மறந்து மீதமிருக்கும் 3 லீக் போட்டிகளிலும் பெங்களூர் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
அதன்படி அந்த அணியானது வரும் 15ம் தேதி உத்தரபிரதேச வாரியர்ஸையும், 18ம் தேதி குஜராத் ஜியாண்ட்ஸையும், 21ம் தேதி நடைபெறும் தனது கடைசி லீக் போட்டியில் பலம்வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியையும் வெல்ல வேண்டும்.
இந்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் ஆர்.சி.பி. மகளிர் அணிக்கு எலிமினேட்டர் போட்டிக்கு செல்ல வாய்ப்பு உருவாகும்.
மும்பை, டெல்லி மட்டுமே வெல்ல வேண்டும்
இங்கே கவனிக்க வேண்டியது, ஒரு ’வாய்ப்பு’ உருவாகுமே தவிர, கண்டிப்பாக அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி என்பது ஆர்.சி.பி. அணிக்கு மிக அவசியமானது.
அதன்படி, முதல் சீசனில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படும் மும்பை, டெல்லி ஆகிய இரு அணிகளும் தங்களது அடுத்த குஜராத் மற்றும் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
அப்படி பெங்களூர் அணி தன்னுடைய அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அந்த அணி எதிர்பார்ப்பது போலவே மும்பை மற்றும் டெல்லி அணிகள் மட்டுமே தங்களுடைய அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் ஆர்.சி.பி. அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறும்.
பெங்களூருவின் விதி எழுதும் குஜராத்
எனினும் அப்போதும் அந்த அணிக்கு ஒரு முட்டுக்கட்டை உள்ளது. அதாவது மேற்கூறிய இரண்டு விஷயங்கள் நடந்தாலும் மூன்றாவதாக முக்கியமான ஒரு சம்பவம் ஆர்.சி.பி. மகளிர் அணிக்கு தேவை.
அதாவது மேலே கூறிய இரண்டு விஷயங்கள் அரங்கேறினால் மட்டும் ஆர்.சி.பி. மகளிர் அணி எலிமினேட்டர் போட்டிக்கு முன்னேறாது. அத்துடன் வரும் 20ம் தேதி நடக்க இருக்கும் குஜராத் – உத்தரபிரதேசம் அணிகள் இடையேயான போட்டியில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் குஜராத் ஜியாண்ட்ஸ் அணி, 3வது இடத்தில் இருக்கும் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணியை வீழ்த்த வேண்டும்.
அப்போதாவது ‘கப் நம்தே’ ஆகுமா?
இந்த அனைத்து விஷயங்களும் ஒருவேளை நடந்தால், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஆர்.சி.பி. மகளிர் அணி கெத்தாக மும்பை, டெல்லி அணிகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து எலிமினேட்டர் போட்டிக்கு தகுதி பெறும்.
அதிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்றால் ஆர்.சி.பி. ரசிகர்களின் பல வருட கனவை நிறைவேற்றிய பெருமை ஸ்மிருதி மந்தனாவுக்கு வந்து சேரும்.
எனினும் கள நிலவரத்தை பார்க்கையில் இவ்வாறு நடப்பதற்கு 90 சதவீதம் வாய்ப்பில்லை என்பதே எதார்த்த உண்மை. ஏனெனில் பெங்களூரு அணியின் அசாத்திய பலமாக கருதப்படும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இந்த தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கமுடியாமல் திணறி வருகிறார். மேலும் அந்த அணி பந்துவீச்சிலும் மிக மோசமான நிலையில் உள்ளது.
ஒருவேளை அதிர்ஷ்ட காற்று அல்ல, அதிர்ஷ்டத்தின் புயல் ஸ்மிருதி மந்தனா தலைமயிலான பெங்களூரு மகளிர் அணிக்கு சாதகமாக அடித்தால் அப்போது ‘ஈ சாலே கப் நம்தே’ என்று உரக்க கத்த வாய்ப்பிருப்பதாக கருதுகின்றனர் அந்த அணியின் தீவிர ரசிகர்கள்.
ஆனால் மேற்கூறியவற்றில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் ஆர்சிபி மகளிர் அணியின் கதி அந்தோ பரிதாபம் தான் என்பதே புள்ளிப்பட்டியல் உணர்த்தும் கள நிலவரத்தின் யதார்த்த உண்மை. இந்நிலையில் தங்களது தோல்வியிலிருந்து பாடம் கற்று மீள்வார்களா? கிடைத்திருக்கும் இந்த சிறு வாய்ப்பை பயன்படுத்தி உயர்வார்களா? மயங்கிய நிலையில் இருக்கும் தங்களது நிலையை மாற்றுவார்களா இந்த மந்தனாவின் படை என்பது உ.பி. வாரியர்ஸ் அணிக்கான இன்றைய ஆட்டத்தில் தெரிந்துவிடும்!
கிறிஸ்டோபர் ஜெமா
வந்தே பாரத் ரயிலின் முதல் பெண் ஓட்டுநர்!
பணி நீக்கத்தை உறுதி செய்த மார்க் ஜுக்கர்பெர்க்