2024-ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், பாரிஸில் உள்ள ஸ்டேட் ரோலண்ட் கரோஸ் மைதானத்தில் மே 26 அன்று துவங்கியது.
மே 27 அன்று நடைபெற்ற போட்டிகளில், ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 14 முறை இந்த பிரெஞ்சு ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரஃபேல் நடால், உலக டென்னிஸ் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை எதிர்கொண்டார்.
ஸ்டேட் ரோலண்ட் கரோஸ் மைதானத்தில் உள்ள பிலிப் சாட்ரியர் களத்தில் நடைபெற்ற இப்போட்டியில், துவக்கத்தில் இருந்தே நடாலுக்கு எதிராக ஸ்வெரேவ் ஆதிக்கம் செலுத்தினார். இதன் காரணமாக முதல் சுற்றை 6-3 என எளிதாக ஸ்வெரேவ் கைப்பற்றினார்.
2வது சுற்றில் ஸ்வெரேவ்வுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார், நடால். ஆனால் கடைசியில் 7-6 (7-5) என அந்த செட்டையும் ஸ்வெரேவ் கைப்பற்றினார்.
பின் 3வது செட்டை கட்டாயம் கைப்பற்ற வேண்டும் என நடால் களமிறங்க, துவக்கத்தில் ஆட்டம் இருவருக்கிடையே சமமாக சென்றது. ஆனால், ஸ்வெரேவ்வின் ஆதிக்கம் மீண்டும் தொடர 3வது செட்டையும் 6-3 என அவர் கைப்பற்றினார்.
இதன்மூலம், 14 முறை இந்த பிரெஞ்சு ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரஃபேல் நடால், 2024 பிரெஞ்சு ஓபன் தொடரின் முதல் சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வுக்கு எதிராக 3-6, 6-7 (5-7), 3-6 என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இந்த தொடருக்கு பிறகு அவர் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போட்டி முடிந்தவுடன் அது குறித்து பேசிய ரஃபேல் நடால், “இங்கு நான் விளையாடுவது இதுதான் கடைசி முறையா என்று எனக்கு தெரியவில்லை. என்னால் 100% அதை கூற முடியவில்லை. ஒருவேளை அப்படி இங்கு இது என் கடைசி போட்டி என்றால், அதை முழுக்க முழுக்க அனுபவித்து விளையாடினேன். இன்று எனது உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க கடினமாக உள்ளது”, என தெரிவித்தார்.
மேலும் அவர், “இதே மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட நான் மீண்டும் வருவேன் என நம்புகிறேன். அது மட்டுமே எனக்கு உத்வேகம் அளிக்கிறது. அதற்காக நான் முழுமையாக என்ன தயார்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்”, எனவும் கூறினார். இதன்மூலம், ஓய்வு குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ரஃபேல் நடால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.
இதேபோல, மற்றோரு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 95வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 18வது இடத்தில் உள்ள கரேன் கசநாவ்வை எதிர்கொண்டார். இப்போட்டியில், நாகல் 2-6, 0-6, 6-7 (5-7) என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
ரூ. 4 கோடி : நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் போட்ட விதை… ஜூன் 1 இந்தியா கூட்டணி க்ளைமேக்ஸ் கூட்டம்… பின்னணி!