2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. Is pitch change in favour of India
இந்நிலையில், இந்த போட்டியில், முதலில் தேர்தெடுக்கப்பட்ட பிட்சுக்கு பதிலாக, இந்திய அணிக்கு சாதகமாக ஒரு பிட்ச் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், வான்கடே மைதானத்தில் இந்த அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னதாக 4 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி இமாலய இலக்குகளை எட்டியுள்ளது. முதலாவதாக, இங்கிலாந்துக்கு எதிராக 399 ரன்களையும், வங்கதேசத்திற்கு எதிராக 382 ரன்களையும் தென் ஆப்பிரிக்கா விளாசியிருந்தது. அதை தொடர்ந்து, இந்தியா இலங்கைக்கு எதிராக 357 ரன்களை குவித்தது.
மேலும், இந்த அனைத்து போட்டிகளிலும், 2வது இன்னிங்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இரண்டாவதாக பேட்டிங் செய்ய வந்த அணியின் விக்கெட்கள், சீட்டுக்கட்டு சரிவதுபோல் சரிந்துள்ளது. இதற்கு, மேக்ஸ்வெல் என்ற அரக்கன் மட்டுமே விதிவிலக்கு. வான்கடேவில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியின் 2வது இன்னிங்ஸில், 91 – 7 என ஆஸ்திரேலியா திணறியபோது அவர் தனியாளாக நின்று இரட்டை சதம் விளாசினார்.
முதல் போட்டியில் மைதானத்தில் உள்ள 6வது பிட்சும், 2வது போட்டிக்கு 8வது பிட்சும், இந்தியா விளையாடிய 3வது போட்டிக்கு மீண்டும் 6வது பிட்சும், மீண்டும் 4வது போட்டிக்கு 8வது பிட்சும் தேர்வு செய்யப்பட்டதாகவும், இன்றைய முதல் அரையிறுதி போட்டிக்கு, இந்த தொடரில் இதுவரை பயன்படுத்தப்படாத 7வது பிட்சே முதல் தேர்வாக இருந்ததாகவும், ஆனால், கடைசி நேரத்தில் இதுவரை 2 முறை பயன்படுத்தப்பட்ட 6வது பிட்ச்சுக்கு போட்டி மாற்றப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளே இந்த கடைசி நேர மாற்றத்திற்கு காரணம் எனவும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி விதிகளின்படி, போட்டி நடக்கும் மைதானத்தின் நிர்வாகமே பிட்சை தேர்வு செய்யும். இந்த தேர்வு, ஐசிசி-யால் நியமிக்கப்பட்ட சுயேட்சையான பிட்ச் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் மேற்பார்வையில் நடைபெறும்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, Daily Mail பத்திரிகை வெளியிட்ட செய்தியில், அகமதாபாத்தில் நவம்பர் 19 அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியிலும், இதேபோன்று முதலில் தேர்வு செய்யப்பட்ட பிட்சுக்கு பதில் சுழலுக்கு சாதகமாக பிட்ச் மாற்றப்பட்டுள்ளதாகவும், அது குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில், ஆண்டி அட்கின்சன் ஐசிசி-க்கு இ-மெயில் ஒன்றை எழுதியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “ஐசிசி-யின் சுயேட்சையான பிட்ச் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன், போட்டி நடக்கும் மைதானத்தின் நிர்வாகங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த தொடர் முழுவதும் பின்பற்றப்பட்டு வந்த இயற்கையான நடைமுறையே தற்போதும் தொடர்கிறது” என விளக்கம் அளித்துள்ளார். Is pitch change in favour of India
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!
சேலம் மாநாடு : பைக்கில் பரப்புரையைத் தொடங்கிய உதயநிதி