சர்வதேச அளவில் நடத்தப்படும் விளையாட்டு தொடர்களின் போது போட்டிகளை காண வரும் ரசிகர்களை குறிவைத்து போட்டியை நடத்தும் நாடு தனது சுற்றுலாத்துறை மூலம் வருமானத்தை அள்ளும்.
அந்தவகையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கால்பந்து உலகக்கோப்பை இந்தாண்டு கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில் அந்த நாடே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
ரசிகர்களை ஈர்க்கும் ஒட்டகச் சவாரி
28 லட்சம் மக்கள்தொகை கொண்ட கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கிய கால்பந்து திருவிழாவைக் காண உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.
இதனால் நாள்தோறும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கால்பந்து போட்டிகளுக்கு நடுவே தற்போது பாலைவன நாடான கத்தாரில் ஒட்டகச்சவாரியால் சுற்றுலாத்துறையும் கல்லாக்கட்டி வருகிறது.
மதியம் தொடங்கி நள்ளிரவு வரை போட்டிகள் நடைபெற்றும் நிலையில் காலை வேளைகளில் ஒட்டகச் சவாரிக்காக பலநாட்டு ரசிகர்களும் வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஒரு ஒட்டகம்; 500 சவாரிகள்
இதனால் உள்ளூர் ஒட்டகச் சவாரிக்கு கத்தாரில் கடும் கிராக்கி நிலவுகிறது. பொதுவாக கத்தாரில் வார நாட்களில் 20 சவாரியும், வார இறுதியில் 50 சவாரியும் ஒரு ஒட்டகம் மேற்கொள்ளும்.
தற்போது கத்தாரில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையால், ஒரு ஒட்டகம் காலையில் இருந்து மாலை வரை சுமார் 500 சவாரிகளை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது.
அதிகரித்த பணமும்.. பணிச்சுமையும்
இதுகுறித்து ஓட்டக மேய்ப்பரான சூடானைச் சேர்ந்த அலி ஜாபர் அல் அலி(49 வயது) கூறுகையில், “கடவுளுக்கு நன்றி. உலகக்கோப்பை தயவால் நிறைய பணம் வருகிறது. ஆனால் அதே வேளையில் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
தற்போது அதிகரித்துள்ள ஒட்டகச் சவாரியின் மீதான ஈர்ப்பால், நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒட்டக எண்ணிக்கையானது 15ல் இருந்து 60தாக மாறியுள்ளது. அதே வேளையில் சவாரிகளுக்கு இடையிலான ஓய்வெடுக்கும் நேரம் குறைவாக உள்ளது. இதனால் ஒட்டகங்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வின்றி ஓடும் ஒட்டகங்கள்
ஒரு ஒட்டகம் பொதுவாக ஒவ்வொரு ஐந்து சவாரிகளுக்கு இடையே ஓய்வெடுக்கும். ஒரு குறுகிய சவாரி சுமார் 10 நிமிடங்கள் நீடிக்கும் மற்றும் நீண்ட சவாரி 20 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கும்.
இப்போது ஒட்டகச் சவாரிக்காக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஒரு ஒட்டகம் இடைவெளி இன்றி 20 சவாரிகள் மேற்கொள்கிறது. சில சமயங்களில் 40 சவாரிகள் வரையும் அவைகளுக்கு இடைவெளி வழங்கப்படுவதில்லை.
ஒட்டகச் சவாரியால் கத்தாரில் இப்போது சுற்றுலாத்துறை வருமானம் அதிகரித்து காணப்படுகிறது. எனினும் பாலைவன கப்பல்கள் என்று அழைக்கப்படும் ஒட்டகங்கள் அதிக வேலைப்பளுவால் சுரண்டப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அது வழக்கமானது தான்
எனினும் விலங்குகளுக்காக உலகளவில் வலிய வந்து போராடும் பீட்டா, தற்போது கூறியுள்ள கருத்து பலருக்கும் அதன் நடுநிலமை மீது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பீட்டாவின் சமூக ஊடக தொடர்பு மேலாளர் கேட்டி க்ரையர் பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ”சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் விலங்குகளுக்கு இது போன்ற சிரமங்கள் ஏற்படுவது வழக்கமானது தான்.
கத்தாரில் கொளுத்தும் வெயிலில் மக்களை சுமக்கும் ஒட்டகங்கள், நியூயார்க் நகரின் அடைபட்ட தெருக்களில் வண்டிகளை இழுக்கும் குதிரைகள், கிரேக்கத் தீவான சாண்டோரினியில் நூற்றுக்கணக்கான மக்களை இழுத்துச் செல்லும் கழுதைகள் என்பது வழக்கமான நிகழ்வு தான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் இன மாடுகளை காக்கும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா, ஒருநாளைக்கு 500 சவாரிகள் ஒட்டகத்தின் வலியை வழக்கமான ஒன்று என கூறுவது முரண்பாடாகவே பார்க்கப்படுகிறது.
ஒட்டகச்சவாரி : கத்திரி போடுமா கத்தார்
பிஃபாவின் இந்த உலகக்கோப்பை மூலம் கத்தாரின் சுற்றுலாத் துறை வருமானம் ஏற்றம் கண்டுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டில் நான்கு F1 பந்தயங்கள் உட்பட பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதனால் கத்தார் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து உள்ளது.
அதேவேளையில் வரும் ஆண்டுகளில் கத்தாரில் ஒட்டகங்களின் பாடு திண்டாட்டம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதனால் ஒட்டகச் சவாரியில் கத்தார் அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற வலுவான குரல்கள் இப்போது எழ தொடங்கியுள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா
ராகிங் விவகாரம் : மேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம்!
ஆப்பிள் ஐபோன் Vs எலான் மஸ்க்: என்ன நடக்கிறது?