MS Dhoni: 2024 ஐபிஎல் தொடர் தற்போது சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் கிட்டத்தட்ட தங்கள் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதி செய்துவிட்ட நிலையில், மற்ற அணிகள் மீதமுள்ள 2 இடங்களுக்காக கடுமையாக போட்டி போட்டு வருகிறது.
இந்த தொடரில், முதல் 2 போட்டிகளில் போட்டிகளில் பேட்டிங் செய்ய களமிறங்காத தோனி, அடுத்து தொடர்ந்து 7 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் தனது இமாலய சிக்ஸர்களால் ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 10வது லீக் போட்டியில், தோனி முதல்முறையாக இந்த தொடரில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதை தொடர்ந்து, சென்னை அணி தனது 11வது லீக் போட்டியிலும் பாஞ்சாப் அணியுடனேயே மோதியது. இப்போட்டியில், சென்னை அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், தோனி முன்னதாகவே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷ்ரதுல் தாகூருக்கு பிறகு 9வது வீரராகவே தோனி அப்போட்டியில் பேட்டிங் செய்ய வந்தார்.
இது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரிடம் கடும் விமர்சனத்தை பெற்றது.
முன்னாள் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ஹர்பஜன் சிங், “9வது வீரராக களமிறங்குவதற்கு, தோனி விளையாட வேண்டிய அவசியமே இல்லை. அவருக்கு பதில் நல்ல வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்க்கலாம்”, என கருத்து தெரிவித்திருந்தார்.
அதேபோல, “அவருக்கு 42 வயது ஆகிவிட்டது என எனக்கு தெரியும். ஆனால் அவர் உறுதியான ஃபார்மில் உள்ளார். இப்படியான சூழலில், அவர் பேட்டிங்கில் பொறுப்பேற்று இன்னும் முன்னதாகவே களமிறங்க வேண்டும். அவர் குறைந்தபட்சம் 4, 5 ஓவர்களாவது விளையாட வேண்டும். அவர் கடைசி 2 ஓவர்களில் மட்டும் களமிறங்கி விளையாடுவது சென்னை அணிக்கு உதவவில்லை”, என இர்பான் பதான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளதாலேயே கடைசி சில பந்துகள் இருக்கும்போது பேட்டிங் செய்ய களமிறங்குகிறார் என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, டெரில் மிட்சலின் ரன்னை தோனி நிராகரித்தது சர்ச்சையான நிலையில், இந்த தசைநார் கிழிவு காரணமாக அவரால் அதிக தூரம் ஓடவும் முடியாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த காரணங்களால், மருத்துவர்களை தோனியை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை அணியின் பேக்-அப் கீப்பராக கருதப்படும் டெவன் கான்வேவும் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னரே காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், தோனி போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீச பத்திரன ஆகியோர் சென்னை அணியில் இருந்து விலகியுள்ளனர். தீபக் சாஹர், துஷார் தேஸ்பாண்டே காயம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பாதித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்தடுத்து சென்னை அணி முக்கிய போட்டிகளில் விளையாடவுள்ள சூழலில், தோனி குறித்து வெளியாகியுள்ள செய்தி, சென்னை அணியின் ரசிகர்களை மேலும் கவலையடைய செய்துள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மழையால் குளிர்ந்த சென்னை… கூடுதல் மழைக்கு குறி சொன்ன வெதர்மேன்!
கொரோனா தடுப்பூசிகளை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்!
சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனு: விசாரணை எப்போது?
தக் லைஃப் : சிம்புவின் மரண மாஸ் கெட்டப்.. அறிமுக வீடியோ இதோ!