ஒடிசாவில் இன்று (ஜூன் 9) தொடங்கும் இண்டர்காண்டினென்டல் கால்பந்து கோப்பை தொடரில் மங்கோலியாவை எதிர்கொள்கிறது சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி.
நான்கு நாடுகள் கலந்துகொள்ளும் இண்டர்காண்டினென்டல் கால்பந்து கோப்பை தொடர் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்தியா, லெபனான், வனுவாட்டு மற்றும் மங்கோலியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கின்றன.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் லெபனானும் வனுவாட்டுவும் மோதுகின்றன.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் சொந்த நாட்டு ரசிகர்களின் ஆதரவுடன் மங்கோலியாவை எதிர்கொள்கிறது இந்தியா.
இந்திய அணிக்கு கேப்டனாக கால்பந்து ஜாம்பவான்கள் மெஸ்ஸி, ரொனோல்டோ வரிசையில் தேசிய அணிக்காக அதிக கோல்களை அடித்த சுனில் சேத்ரி உள்ளார்.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய அணிக்காக 133 சர்வதேச போட்டிகளில் களமிறங்கி 85 கோல்களை அடித்துள்ளார் சுனில் சேத்ரி.
மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இண்டர்காண்டினென்டல் கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட 16 கோல்களில் சுனில் சேத்ரி மட்டுமே 11 கோல்களை அடித்துள்ளார். இப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையும் அவர் வசமே உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் வடகொரியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் நடப்பு தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் தனது கால்பந்து வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருக்கும் 38 வயதான கேப்டன் சுனில் சேத்ரிக்காக இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உக்ரைன் அணை உடைப்பு: வெள்ளத்தில் மூழ்கிய 29 கிராமங்கள்!