இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா மேட்ச் பிக்சிங் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிக் அக்தர் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
நடந்து வரும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது இந்தியா.
அதனைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கடுமையான போராட்டத்திற்கு பிறகு 41 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
வெல்லலகேவின் ஆல்ரவுண்ட் ஆட்டம்!
எனினும் இந்திய அணிக்கு கடும் சவால் அளிக்கும் விதமாக இலங்கை அணியின் 20 வயது இளம் வீரரான வெல்லலகே பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் அசத்தலாக விளையாடினார்.
தனது அபாரமான சுழற்பந்துவீச்சால், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
இதனால் இந்திய அணி வெறும் 213 ரன்கள் மட்டுமே குவித்தது. எனினும் இந்தியாவின் குல்தீப் யாதவ், ஜடேஜா, பும்ரா ஆகியோரின் அனுபவ பந்துவீச்சால் இந்திய அணி வெற்றி பெற்றது.
எனினும் பேட்டிங்கிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 42 ரன்கள் குவித்து இந்திய வீரர்களுக்கு அச்சுறுத்தலாக விளையாடினார் வெல்லலகே. அவரது ஒன்மேன் ஷோ காரணமாக, அந்த ஆட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்திய அணி தோல்வியின் விளிம்புக்கு சென்று திரும்பியது.
பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றச்சாட்டு!
இதனையடுத்து பாகிஸ்தானை இறுதிப்போட்டிக்கு தகுதிபெறச் செய்ய கூடாது என்பதற்காகவே இலங்கைக்கு எதிராக இந்திய அணி இவ்வளவு மோசமாக விளையாடியது என்றும், இந்தியா மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது என்றும் அந்நாட்டு ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் அந்நாட்டு ரசிகர்களை கடுமையான சாடியுள்ளார்.
காரணம் இன்றி பழி சுமத்தாதீர்கள்!
அவர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பாகிஸ்தான் பைனலுக்கு வரக்கூடாது என்பதற்காக இந்தியா ’மேட்ச் பிக்சிங்’ செய்தது என்று எனக்கு மீம்ஸ் அனுப்புகிறீர்கள்.
இலங்கையின் பந்துவீச்சை பார்த்தீர்களா? வெல்லலகே மற்றும் அசலங்கா ஆகியோர் போட்டி முழுவதும் உணர்வுப்பூர்வாக விளையாடினர்.
இலங்கைக்கு எதிராக இந்தியா சிறப்பாக செயல்பட முடியாததற்கான காரணம் பாகிஸ்தான் அல்ல. வெல்லலகே தான். அவர் 42 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வெற்றி பெற வேண்டும் என்பதால், இலங்கை அணிக்கு எதிரான போட்டியை இந்தியா எளிதாக எடுத்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல விரும்பியபடி போராடியது அதன்படி வெற்றிபெற்றது. குறைந்த இலக்கை வைத்துக்கொண்டு குல்தீப் மற்றும் பும்ரா சிறப்பாக பந்துவீசியது மிகப்பெரிய விஷயம். ஆனால் நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் இந்தியாவை பழி சுமத்துகிறீர்கள்” என்று அக்தர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நெருக்கடியில் பாகிஸ்தான்!
இதற்கிடையே வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடியில், இலங்கை அணியை கொழும்பில் இன்று மதியம் 3 மணிக்கு சந்திக்கிறது பாகிஸ்தான் அணி.
ஆனால் சொந்த நாட்டு ரசிகர்களின் ஆதரவும், மழை வாய்ப்பும் இலங்கை அணிக்கு சாதகமாக உள்ளது.
ஒருவேளை ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால், ரன்ரேட் அடிப்படையில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்திய மாணவி பலி: கேலி பேசிய அமெரிக்க போலீசாரிடம் விசாரணை!
ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு 14 நாட்கள் சிறை!
ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு கேளிக்கை வரி: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்!