ஐசிசி தலைவர் தேர்தலில் கங்குலி?

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ-யின் புதிய சட்ட விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மனுதாக்கல் செய்திருந்தது.

கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் பிசிசிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,

”கிரிக்கெட் நல்ல முறையில் நெறிப்படுத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐ முன்மொழிவின்படி, உறுப்பினர்களின் பதவிக்கால நீட்டிப்புத் தொடர்பான புதிய சட்டத் திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

பிசிசிஐ: நீங்களே பாத்துக்குங்க!

இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், ”பிசிசிஐ ஒரு தன்னாட்சி அமைப்பு, அதன் ஒவ்வொரு செயல்பாட்டையும் தங்களால் மேலாண்மை செய்ய முடியாது” என்று கூறி பிசிசிஐ-யின் புதிய சட்டத் திருத்தங்களுக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

இதன்படி, பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் பிற நிர்வாகிகள் தங்களது பதவிகளில் மேலும் 3 ஆண்டுகள் தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை கங்குலி ஐசிசி பொறுப்பை ஏற்றால், ஜெய் ஷா பிசிசிஐ தலைவராக வருவார். பொருளாளர் பதவியில் இருக்கும் அருண் துமால் பிசிசிஐ செயலாளராக வருவார்.

பார்க்லி விருப்பம் மறுப்பு!

ஐசிசியின் தற்போதைய தலைவரான கிரெக் பார்க்லியின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஐசிசி தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது.

கடந்த ஜூலை மாதம் பர்மிங்காமில் நடந்த வருடாந்திர மாநாட்டில் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் ஐசிசி தலைவராக செயல்பட நியூசிலாந்தைச் சேர்ந்த பார்க்லி ஆர்வம் காட்டினார்.

எனினும் அவரது விருப்பம் மறுக்கப்பட்டு, அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஐசிசி தலைவர் தேர்தலுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை இல்லை என்றும், 51% வாக்குகளைப் பெறுபவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 16 பேர் கொண்ட ஐசிசி கமிட்டியில் ஒன்பது வாக்குகளைப் பெற வேண்டும்.

ஐசிசி தலைவராகும் 5வது இந்தியர்?

தற்போது ஐசிசி தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் ஐசிசி தலைவர் பதவியை வகிக்கும் ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை கங்குலி பெறுவார்.

அவருக்கு முன்னதாக என் சீனிவாசன், ஷஷாங்க் மனோகர், ​​ஜக்மோகன் டால்மியா, சரத் பவார் ஆகியோர் ஐசிசி தலைவர் பதவியை வகித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

சர்வதேச டென்னிஸ் போட்டி: கலக்கும் தத்ஜானா மரியா – யார் இவர்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *