ODI ICC World Cup 2023: 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், நேற்று (அக்டோபர் 28) 2 போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், 2வது போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும் மோதிக்கொண்டன.
ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்காக துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் (81 ரன்கள்) & டிராவிஸ் ஹெட் (109 ரன்கள்), முதல் விக்கெட்டிற்கு 175 குவித்து அசத்தினர்.
இவர்கள் விக்கெட்டிற்கு பிறகு பின் ஆஸ்திரேலியாவின் வேகம் சற்று குறைந்தாலும், இறுதியில் மேக்ஸ்வெல் (41 ரன்கள்) & பாட் கம்மின்ஸ் (37 ரன்கள்) அதிரடியால், இறுதியில் 388 ரன்கள் சேர்த்தது. நியூஸிலாந்துக்காக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
389 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அதிரடியாகவே ஆட்டத்தை துவங்கியது. 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா (116 ரன்கள்) & டெரில் மிட்சல் (54 ரன்கள்), நியூசிலாந்தை வெற்றியை நோக்கி வேகமாக ஓட வைத்தனர். ஆனால் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு நியூசிலாந்து அணி சற்று தடுமாறினாலும், 7வதாக களமிறங்கிய ஜிம்மி நீசம் மீண்டும் நம்பிக்கை அளித்தார்.
இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது. 69 பந்துகளில் 107 ரன்கள் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ட்விஸ்ட் கொடுத்த நெதர்லாந்து!
வங்கதேசம் & நெதர்லாந்து அணி இடையேயான மற்றொரு போட்டியில், முதலில் பேட்டிங் செய்ய வந்த நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்திருத்தது.
பின் களமிறங்கிய வங்கதேசம், துவக்கத்திலேயே மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. பேட்ஸ்மேன்களில் மெஹ்தி ஹசன் மிராஸ் (35 ரன்கள்) தவிர அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி வெறும் 142 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால், நெதர்லாந்து 87 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
கடைசி இடத்தில் நடப்பு சாம்பியன் ‘இங்கிலாந்து’
10 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா முதல் 2 இடங்களை தங்கள் வசம் வைத்துள்ளது. நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் இருக்க, அந்த அணிக்கு எதிராக வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்ற ஆஸ்திரேலியா, ரன் ரேட் அடிப்படையில் தொடர்ந்து 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மறுமுனையில், கடைசி இடத்தில் இருந்த நெதர்லாந்து, நேற்றைய வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இதன் காரணமாக, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இங்கிலாந்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தொடர் தோல்விகளால் அந்த அணிக்கு அரையிறுதி குறைந்து வரும் நிலையில், அதனை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள, இன்று லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களிமிறங்குகிறது இங்கிலாந்து அணி.
முரளி
ICC WorldCup: சொதப்பிய வங்கதேசம்…. சுருட்டி வீசிய நெதர்லாந்து!
சண்டே ஸ்பெஷல்: சாப்பாட்டுக்குப் பிறகு வரும் தூக்கம்… தீர்வு என்ன?