ஐபிஎல் தொடரின் 61வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் இன்று (மே 14) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. நடப்பு சீசனில் சென்னை அணி சேப்பாக்கில் விளையாடும் கடைசி லீக் போட்டி இதுவாகும்.
கடந்த சீசனில் 9வது இடத்தை பிடித்து மோசமான நிலையில் தொடரில் இருந்து வெளியேறிய சென்னை அணி, இந்த ஆண்டு தோனி தலைமையின் கீழ் புத்தெழுச்சியுடன் களமிறங்கியது.
நடப்பு சீசனில் இதுவரை 12 லீக் போட்டிகளில் ஆடியுள்ள சென்னை, 7 வெற்றி மற்றும் 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
சேப்பாக்கில் ஆதிக்கம்!
4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தனது சொந்த மைதானமான சேப்பாக்கில் விளையாடிய சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் நான்கில் வென்று ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளுடன் டாப் இடத்திற்கு செல்வதோடு ப்ளேஆஃப் வாய்ப்பையும் சிஎஸ்கே அணி உறுதி செய்யும்.
அதேவேளையில் கொல்கத்தா அணி மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆஃப் வாய்ப்பு கடினம்தான். ஆனால் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பரிதாபமாக தோற்றதற்கு சிஎஸ்கே அணியை பழிவாங்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுழலுக்கு சாதகமான சேப்பாக்கில், இரு அணிகளிலும் தரமான, அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
நடப்பு தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து மட்டுமே சென்னை அணி 35 விக்கெட்டுகளையும், கொல்கத்தா அணி 37 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது. எனினும் இரு அணிகளுக்கு இடையிலான ஸ்பின் அட்டாக்கில் நல்ல எகானமியுடன் சிஎஸ்கே அணியே முன்னணியில் உள்ளது.
அதோடு சென்னை அணிக்கு மைதானத்தில் நிரம்பி வழியும் அதன் ரசிகர்களின் பலமும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனியின் கடைசி போட்டி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் என்று கூறப்படுகிறது.
இன்னும் உறுதிசெய்யப்படாத தகவல் என்றாலும், நடப்பு தொடரில் சென்னை அணிக்காக சேப்பாக்கில் தோனி பங்கேற்கும் கடைசி லீக் போட்டி என்பதால் மைதானத்தை சுற்றி ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் இப்போட்டிக்கான டிக்கெட்டை வாங்குவதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிவரும் தோனி தனது அதிரடியான ஆட்டம் மூலம் 200+ ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரசிகர்களை இன்னும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
அதனை இந்த ஆட்டத்திலும் தொடரும் பட்சத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முதல் அணி என்ற பெருமையை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அப்படி நடந்தால் சென்னை சேப்பாக்கில் மே 23ஆம் தேதி நடைபெறும் பிளே ஆப் முதல் போட்டியில் மீண்டும் தல தோனியின் தரிசனம் கிடைக்கும்!
கிறிஸ்டோபர் ஜெமா
கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்: சிஎஸ்கே கேப்டன் தோனி
இஸ்லாமிய சமூகம் பற்றிய நல்ல படங்களுக்கு ஆரம்ப புள்ளி ‘ஃபர்ஹானா’: நெல்சன்