MS Dhoni: 2024 ஐபிஎல் தொடரில் முதல் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 191 ரன்கள் குவிக்க, 2வதாக களமிறங்கிய சென்னை அணியால் 171 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதன்மூலம், இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பெற்ற டெல்லி, ருதுராஜ் தலைமையிலான அணிக்கு முதல் தோல்வியையும் பரிசாக வழங்கியது.
இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்திருந்தாலும், 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ‘தல’ தோனி 3 சிக்ஸ், 4 ஃபோர் என 16 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். சென்னை அணி தோல்வியடைந்திருந்தாலும், தோனியின் இந்த ஆட்டம் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
தனது இந்த ஆட்டத்தால் பல மைல்கற்களையும் தோனி எட்டியிருந்தார்.
ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை பூர்த்தி செய்யும் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார். தோனி தற்போதுவரை விக்கெட் கீப்பராக 5,001 ரன்களை குவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 7,000 ரன்களை கடந்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அவர் தற்போதுவரை, டி20 கிரிக்கெட்டில் 7,036 ரன்கள் விளாசியுள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் 19வது & 20வது ஓவர்களில் 100 சிக்ஸ்கள் விளாசிய முதல் மற்றும் ஒரே வீரர் என்ற சாதனையும் தோனி படைத்தார்.
ஐபிஎல் தொடர்களில், அதிக முறை ஒரு ஓவரில் 20-க்கும் அதிகமாக ரன்களை சேர்த்த வீரர்கள் பட்டியலில், ரோகித் சர்மாவை பின்னுக்குத்தள்ளி தோனி முதலிடம் பிடித்தார். தோனி 9 முறை ஒரு ஓவரில் 20-க்கும் அதிகமான ரன்களை விளாசியுள்ளார்.
இவை மட்டுமின்றி, டி20 போட்டிகளில் 300 விக்கெட்களை கைப்பற்றிய முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையையும் தோனி படைத்தார்.
இப்படி, 2024 ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேனாக தான் களமிறங்கிய முதல் போட்டியிலேயே பல சாதனைகளை குவித்த தோனி குறித்து பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி வருகிறது.
முன்னதாக, நேற்று போட்டி நிறைவடைந்த உடனேயே தோனி தனது காலில் ஐஸ் பேக் வைத்துக்
கொண்டு நடந்து செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில், தோனிக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுவிட்டதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று மைதானத்தில் இருந்து ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு தோனி நடந்து செல்லும் ஒரு முழு நீள காணொளியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தது.
அதில், தனது இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு ஒரு பரிசு என தல தோனி கூறியதாகவும், அணி நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.
A gift for the fans he said! 🥹✨#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/fAIitAsPD7
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2024
இந்நிலையில், அந்த வீடியோவில் தோனி நடக்க சிரமப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அது ரசிகர்கள் மத்தியில் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவுக்கு கீழ், “தல தோனிக்கு இன்னும் முழங்கால் காயம் சரியாகவில்லையா?”, “தல தோனிக்கு இன்னும் காயம் சரியாகவில்லை. ஆனால், அவர் ரசிகர்களுக்காக விளையாடுகிறார்”, என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகிழ்
சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு பாதுகாப்பு வேண்டுமா?: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி!
என்.சி.பி விசாரணை : நாளை ஆஜராகிறாரா அமீர்?