பதிரானாவுக்காக போட்டியை நிறுத்திய தோனி: பைனலில் விளையாட தடையா?

விளையாட்டு

குஜராத் அணிக்கு எதிரான குவாலிபையர் போட்டியில் 16வது ஓவரை பதிரானாவை வீச வைப்பதற்காக தோனி செய்த சம்பவம் சமூகவலைதளங்களில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடர் இப்போது பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ள நிலையில் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தாரும் உருகியோடும் சம்மருக்குள், சடசடவென அதிரடியாய் அதகளமாய் முடிந்துவிட்டது லீக் சுற்றுகள். அதன் முடிவில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும்  பிளே ஆஃப் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தன.

10வது முறையாக இறுதிப்போட்டியில் சென்னை

அதனைத்தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மே 23ஆம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின.

பனிவிழும் என்று எதிர்பார்த்து டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. ஆனால் தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி பனி இடர்படாத சென்னை அணியின் பந்துவீச்சில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சூப்பராக முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத இந்த சாதனையாக 10வது முறை பைனலுக்கு அழைத்து சென்றுள்ள கேப்டன் தோனியை சென்னை அணி ரசிகர்கள் சமூகவலை தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தோனி செய்த சம்பவம்

அதே வேளையில் போட்டியில் தோனி செய்த சம்பவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 2.30 நிமிட டைம் அவுட் முடிந்து 16வது ஓவரை வீசுவதற்காக சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவிடம் பந்தை கொடுத்தார் கேப்டன் தோனி.

அதனை கள நடுவர்கள் திடீரென தடுத்த நிலையில், தோனி அவர்களுடன் சிரித்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் என்ன நடக்கிறது என்று அங்கிருந்த வீரர்களை தவிர யாருக்கும் சிறிது நேரம் தெரியவில்லை. மேலும் சிஎஸ்கே வீரர்களும் தோனியுடன் சேர்ந்து நின்ற நிலையில் மைதானம் முழுவதும் பரபரப்பு தொற்ற ஆட்டம் சுமார் 4 நிமிடங்கள் அப்படியே நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.

உண்மையில் நடந்தது என்ன?

அப்போது தான் ஏன் போட்டி சிறிது நிறுத்தப்பட்டது என்பதற்கான காரணம் புரிந்தது. அதாவது 2.30 நிமிட டைம் அவுட் முடிந்து பதிரானா சிறிது தாமதமாக களத்திற்குள் வந்ததால் பந்து வீசக்கூடாது என நடுவர்கள் தடுத்துள்ளனர்.

பதிரானா 9 நிமிடங்களுக்கு ஃபீல்டிங் மட்டுமே செய்ய முடியும் பந்து வீச முடியாது என அவர்கள் தோனியிடம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே ஒரு ஓவர் பதிரானா வீசியிருந்த நிலையில் 16, 18 மற்றும் 20வது என 3 ஓவர்களை அவர் வீச வேண்டும் என்ற கட்டாயம் சென்னை அணிக்கு இருந்தது. வேறு யாரிடமும் கொடுத்தால் களத்தில் நின்ற விஜய் சங்கர் – ரஷீத் கான் ஜோடியின் அதிரடியால் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற ஐயமும் இருந்தது.

எனவே 5 நிமிடங்கள் ஏற்கனவே முடிந்திருந்த நிலையில் மீதமுள்ள 4 நிமிடங்களுக்கும் அம்பயர்களிடம் பேசியபடியே  நேரத்தை கடத்திய தோனி, தான் திட்டமிட்டபடியே பதிரானாவை, 16வது ஓவர் வீச வைத்தார். அந்த ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 13 ரன்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குவாதம் தேவையற்றது!

இதுகுறித்து ஜி.டி-சிஎஸ்கே போட்டியை வர்ணணை செய்து கொண்டிருந்த சுனில் கவாஸ்கர் கூறுகையில்,”இதனை ஏற்க முடியவில்லை. சில நெருக்கடியான சூழ்நிலைகளில் நடுவர்கள் தவறு செய்தாலும் அதனை வீரர்கள்  ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

“நடுவர்களுடன் தோனி நடத்திய அந்த ஐந்து நிமிட வாக்குவாதம் தேவையற்றது. அவர் செய்ததெல்லாம் வேறொரு பந்துவீச்சாளரைப் பந்துவீச விடாமல் விளையாட்டை நிறுத்தியதுதான்.” என்று மற்றொரு வர்ணனையாளர் சைமன் டவுலும் சிறிது நொந்துக் கொண்டார்

இந்த சம்பவத்தை ‘உண்மையில் வினோதமான ஒன்று’ என கிரிக்பஸ் இணையதளம் விவரித்துள்ளது.

அதேநேரத்தில் இந்த சம்பவம் நடந்தபோது தோனிக்கு அருகில் நின்ற ருத்துராஜிடம் போட்டி முடிந்தபிறகு இதுகுறித்து கேட்கப்பட்ட்து. அதற்கு அவர், “உண்மையில் எனக்கு எதுவும் தெரியாது. ஏதோ நடக்கிறதே என்று ஆர்வத்தில் பார்க்க சென்றேன். கடைசிவரை எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்று தெரிவித்தது பலரையும் ’அடப்பாவி’ என ஆச்சரியத்தில் உறைய வைத்தது.

தோனிக்கு தடையா?

எனினும் முக்கியமான போட்டியில் வேண்டுமென்றே தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்திய தோனி மீது நடுவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது இதுவரை தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

தோனி செய்தது குற்றமாக கருதப்பட்டால், அபராதம் அல்லது ஒரு போட்டியில் தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி ஏற்கனவே தொடரின் தொடக்கத்தில் குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக ஓவர்வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக 2 முறை ஓவர்ரேட்டிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, குஜராத் அணிக்கு எதிராக, பதிரனாவுக்காக போட்டியில் தாமதம் ஏற்படுத்தியது தவறு என்பதால், நிச்சயம் ஓவர்ரேட் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அப்படி விதிக்கப்பட்டால், சென்னை அணி கேப்டனான தோனியால் பைனலில் விளையாட முடியாது.

ஆம், ஒரு சீசனில் மூன்றுமுறை ஓவர்ரேட் வார்னிங் விடப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டால், ஒரு போட்டியில் விளையாட அணியின் கேப்டனுக்கு தடை விதிக்கப்படும். ஆகையால், தோனி கடைசிப் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னை அணிக்கு பலம் வாய்ந்த வீரர்கள் எத்தனை பேர் இருந்தாலும், அவர்களுக்கு மேலாய் மிகப்பெரிய சொத்தாக தோனி கருதப்படுகிறார்.

இந்நிலையில் பைனலில் விளையாட தோனிக்கு தடைவிதிக்கப்பட்டால், அது சென்னை அணியை எதிர்த்து விளையாடும் எதிர் அணியைத் தவிர, மற்ற யாருக்குமே மகிழ்ச்சி தர முடியாது என்பதே மறுக்கமுடியாத சோகமான உண்மை.

பொறுத்திருந்து பார்ப்போம்!

கிறிஸ்டோபர் ஜெமா

ஐபிஎல் தொடரில் மீண்டும் தோனி?: அவரே அளித்த அட்டகாசமான பதில்!

சன்யாசியாக விரும்பியவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி!

+1
1
+1
1
+1
1
+1
1
+1
3
+1
1
+1
0