இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று (அக்டோபர் 26) நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்பொர்ன் மைதானத்தில் இன்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின.
இரு ஐரோப்பிய அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
157க்கு ஆல் அவுட்!
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பால்பிர்னி 62 ரன்களும், டக்கர் 34 ரன்களும் அடித்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் மற்றும் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகளும், ரஷித் 2 விக்கெட்டுகள் பென்ஸ்டோக்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைதொடர்ந்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
சடசடவென சரிந்த விக்கெட்டுகள்!
ஆனால் ஆரம்பமே அதிர்ச்சியாக தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜோஸ் பட்லர்(0) மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ்(7) ஆகியோர் வந்த வேகத்தில் மைதானத்தை பார்த்துவிட்டு பெவிலியன் திரும்பினர்.
அவர்களை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ்(6) மற்றும் ப்ரூக்(18) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருவழியாக தாக்குபிடித்து ஆடிய டேவிட் மாலனும் 14வது ஓவரில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது மைதானத்திற்கு மேலாக மேகம் குவிய, வேகம் காட்டிய மொயீன் அலி பவுண்டரி, சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார்.
குறுக்கிட்ட மழை… குதுகாலத்தில் அயர்லாந்து!
அதே நேரத்தில் மழையும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் குவித்திருந்தது .
களத்தில் மொயீன் அலி 24 ரன்களுடன், லிவிங்ஸ்டன் 1 ரன்களுடனும் இருந்தனர்.
ஆட்டம் தடைபட்டிருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி 110 ரன்களை கடந்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணி 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதன்மூலம் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1ல் இடம்பெற்றிருக்கும் அயர்லாந்து அணி 2 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக தென்னாப்பிரிக்க ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் மழை குறுக்கிட்டு ஆட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
பசும்பொன் செல்லாத எடப்பாடி : ஜெயக்குமார் விளக்கம்!
தீபாவளி படங்கள் : சாதித்த சர்தார் சறுக்கிய பிரின்ஸ்!