குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடைபெறவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை பிற அணிகளில் இருந்து வாங்கவோ, விற்கவோ செய்யலாம். இதனால் தற்போது ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூபாய் 15 கோடி கொடுத்து வாங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதே நேரம் கேப்டனாக ஹர்திக் விளையாடிய 2 ஐபிஎல் தொடர்களிலும் இறுதிப்போட்டிக்கு சென்று முதல்முறையே ஐபிஎல் கோப்பையை வென்ற அணி குஜராத் டைட்டன்ஸ்.
எனவே அவ்வளவு எளிதாக அவர்கள் ஹர்திக்கை விட்டு கொடுப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்றாலும் அந்த அணியை பொறுத்தவரை கனே வில்லியம்சன், ரஷீத் கான், டேவிட் மில்லர், சுப்மன் கில் என அடுத்த கட்டமாக அணியை வழிநடத்தி செல்ல தகுதியுடைய வீரர்கள் இருக்கின்றனர்.
அதனால் தான் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு விற்க குஜராத் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மாவுக்கு பின் அணியை வழிநடத்தி செல்ல ஹர்திக் பாண்டியா போல ஒருவர் தேவை என்பதால் தான் மும்பை மீண்டும் அவரை அணிக்கு எடுக்கவிருக்கிறதாம்.
அதே நேரம் வருகின்ற 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியை தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா வழிநடத்தி செல்வாரா? இல்லை ஹர்திக் பாண்டியா அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவாரா? என்பது தெரியவில்லை.
ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தாலும், கடந்த 3 வருடங்களாக அவரின் ஆட்டம் சீராக இல்லை. எனவே மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை அடுத்து என்ன நடக்கும்? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இதுகுறித்த பல்வேறு யூகங்கள் எழுந்துள்ள நிலையில், விரைவில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக கேப்டன் குறித்த விவரங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
இளைஞரணி மாநாடு டொனேஷன்: மாசெக்களுக்கு காத்திருக்கும் ஷாக்!
கே.எஸ்.அழகிரியை கண்டித்து ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் போராட்டம்!