அந்த வீரரை 20 கிலோ எடை குறைக்க சொல்லுங்கள் நான் ஐபிஎல்க்கு எடுத்து கொள்கிறேன் என, தோனி தன்னிடம் சொன்னதாக முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் துபாயில் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த அஸ்கர் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 252 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து சேஸிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் அந்த போட்டி வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த போட்டிக்கு பின் தோனி சொன்ன சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை அஸ்கர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர், ”தோனி ஒரு சிறந்த கேப்டன் மட்டுமின்றி சிறந்த மனிதரும் ஆவார். இந்தியன் கிரிக்கெட்டிற்கு கடவுள் அளித்த பரிசு என அவரை சொல்லலாம்.
அன்று போட்டி முடிந்த பிறகு நானும், தோனியும் நீண்ட நேரம் சாட் செய்து பேசினோம். அப்போது ஆப்கான் வீரர் மொஹம்மது சசாத் குறித்து பேச்சு வந்தது.
நான் அவரிடம் சசாத் உங்களின் மிகப்பெரிய ரசிகர் என கூறினேன். பதிலுக்கு தோனி சிரித்துக்கொண்டே அவரை 20 கிலோ எடை குறைக்க சொல்லுங்கள். நான் ஐபிஎல்க்கு எடுத்து கொள்கிறேன் என கூறினார்.
ஆனால் ஆசிய கோப்பை தொடர் முடிந்து சசாத் மீண்டும் அணிக்கு திரும்பிய போது அவர் மேலும் 5 கிலோ எடை அதிகரித்து வந்தார்,” என தெரிவித்து உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
வேளச்சேரி 50 அடி பள்ளம்: விடிய விடிய போராடும் மீட்பு படை… ஒருவர் சடலமாக மீட்பு!