ரூ.3,257 கோடியை இங்கிலாந்து கிளப்புகளில் முடக்கும் ஐ.பி.எல் அணிகள்… பின்னணி என்ன?

Published On:

| By Kumaresan M

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சங்கம் சமீபத்தில் பிரிட்டனில் உள்ள 100 பந்து கிரிக்கெட் கிளப்புகளின் பங்குகளை வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ரிலையன்ஸ் குழுமம் ஓவல் இன்வெசிபில் அணியின் பங்குகளை வாங்கியுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கோ உரிமையாளரான ஜி.எம்.ஆர் குழுமம் சதர்ன் பிரேவ் அணியிலும் லக்னோ சூப்பர் ஜையன்ட்ஸ் அணியின் ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியிலும் முதலீடு செய்துள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் உரிமையாளரான சன்.டி.வி குழுமம் நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியில் முதலீடு செய்துள்ளது. இந்த நான்கு ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மட்டும் இங்கிலாந்து அணிகளில் ரூ.3257 கோடியை கூட்டாக முதலீடு செய்துள்ளனர்.

இப்போது, இந்த அணிகளில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இந்திய நிறுவனங்கள் வாங்கியுள்ள அணிகளில் பாகிஸ்தான் அணி வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தொடர்ந்து அணியில் விளையாட வைக்கப்படுவார்களா? என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

ஏனென்றால், தென்னாப்ரிக்காவில் 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் எஸ்.ஏ 20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் 6 அணிகளும் இந்தியா ஐ.பி.எல் அணி உரிமையாளர்களுக்கு சொந்தமானது. இந்த அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில், இது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சங்கத் தலைவர் ரிச்சர்ட் கோல்ட் கூறுகையில், மற்ற இடங்களில் வேண்டுமானால் அப்படி நடந்திருக்கலாம். ஆனால், 100 பந்துகள் தொடரில் எங்களின் விதியைதான் பின்பற்ற வேண்டும் என்கிறார்.

டி 20 போட்டி போல இங்கிலாந்து 100 பந்து கிரிக்கெட் தொடர் பாப்புலரானது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share