ஐபிஎல் ஏலம் 2023 எப்போது, எங்கு நடைபெறுகிறது?
ஐபிஎல் மினி ஏலம் கொச்சியில் இன்று (டிசம்பர் 23) மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. 2022 சீசனுக்கு முன்பாக நடத்தப்பட்ட மெகா ஏலத்திற்கு பிறகு நடத்தபடும் மினி ஏலமாகும்.
எந்த அணியிடம் அதிக பணம் உள்ளது? யாரிடம் குறைவாக உள்ளது?
ஏலத்திற்கு முன்னதாக பத்து வீரர்களை விடுவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 42.25 கோடி வைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறைந்தபட்சமாக ரூ.7.05 கோடி மட்டுமே வைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.20.45 கோடி உள்ளது.
ஏலத்தில் எத்தனை வீரர்கள் உள்ளனர்?
ஏலப் பட்டியலில் முதலில் 991 வீரர்கள் இருந்தனர். எனினும் இறுதி பட்டியலில் 405 பேர் மட்டுமே உள்ளனர். இந்தியாவிலிருந்து 273 வீரர்களும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 132 வீரர்களும் உள்ளனர்.
ஐபிஎல் ஏல வரலாற்றில் சாம் கர்ரன் சாதனை படைக்க வாய்ப்புள்ளதா?
2021 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இந்த சாதனையை சாம் கர்ரன் முறியடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில் இடது கை ஆல்ரவுண்டரான அவரால் லெவன் அணியில் எங்கு வேண்டுமானாலும் பேட் செய்ய முடியும். பந்துவீச்சில் பவர்பிளே மற்றும் முக்கியமான வேளையில் முன்னணியில் நிற்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் மற்றும் ஆட்டநாயகன் விருது வென்று உலக அரங்கில் தன்னை சிறந்த வீரராக சாம் கர்ரன் நிலைநிறுத்தியுள்ளார்.
அவருடன் சக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் ஆகியோரும் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
எனினும் 24 வயது இளம் வீரரான சாம் கர்ரனை நீண்ட காலத்திற்கு அணியில் தக்க வைக்க தான் அணிகள் ஏலத்தில் போட்டியிடுவார்கள்.
ஏலத்தில் கவனிக்கத்தக்க இந்திய வீரர்கள் யார்?
இந்தியர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசன் முன்னனியில் உள்ளார். 50 ஓவர் விஜய் ஹசாரே டிராபியில் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை விளாசிய பரபரப்பை ஏற்படுத்திய அவரின் மதிப்பு ஏலத்திலும் எகிறக்கூடும்.
இவருடன், பஞ்சாப் ஆல்ரவுண்டர் சன்விர் சிங், விதர்பா வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர், இமாச்சல பிரதேச ஃபினிஷர் ஆகாஷ் வசிஷ்ட், வைபவ் அரோரா, ஷாருக் தார் மற்றும் முஜ்தபா யூசுப் ஆகியோரும் கவனிக்கப்பட வேண்டிய இந்திய இளம் வீரர்கள் ஆவர்.
வளர்ந்து வரும் வெளிநாட்டு அணியைச் சேர்ந்த வீரர்கள் யார்?
அயர்லாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில், சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிராக ஹாட்ரிக் சாதனை படைத்தார். இவர் ஏற்கெனவே 2022ல் சூரத்தில் நடந்த முகாமின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிகரப் பந்துவீச்சாளராக இருந்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லெக்ஸ்பின்னர் கார்த்திக் மெய்யப்பன், டி20 உலகக் கோப்பையின் போது ஹாட்ரிக் சாதனை படைத்தார். நவீன ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக அறியப்படும் கார்த்திக் மற்றும் சிஎஸ்கே மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு நிகர பந்து வீச்சாளராக இருந்த அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏல பட்டியலில் இருக்கும் இளைய மற்றும் வயதான வீரர்கள் யார்?
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 15 வயதான சுழற்பந்து வீச்சாளர் அல்லா முகமது கசன்ஃபர் இளையவராக அறியப்படுகிறார். இதுவரை மூன்று T20களில் மட்டுமே கசன்ஃபர் விளையாடியுள்ளார். எனினும் அவர் ஐபிஎல் ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த மாதம் 40 வயதை எட்டிய முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா இந்த ஏலத்தில் அதிக வயதான வீரர் ஆவார். அவரை 2022 ஏலத்தில் எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. எனினும் இந்திய மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களின் சமீபத்திய பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அமித் மிஸ்ரா இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
ஏலத்தில் பங்கேற்காத முக்கிய வீரர்கள் யார்? யார்?
ஐபிஎல் ஜாம்பவான்களான டுவைன் பிராவோ மற்றும் கெய்ரன் பொல்லார்ட் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். எனினும் இருவரும் முறையே சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸில் பயிற்சியாளராக வரும் தொடரில் இருப்பார்கள்.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆஷஸ் தொடரில் பங்கேற்பதற்காக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலிய மூவரான பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் நைட் ரைடர்ஸுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி உள்ளனர்.
கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர் எவின் லூயிஸ் மற்றும் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் டிம் சீஃபர்ட் ஆகியோரும் இந்த ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவில்லை.
ஏலத்தில் ‘அக்சிலேட்ரட் முறை’ என்றால் என்ன?
ஏலத்தில் முதல் 86 பெயர்கள் அறிமுகத்திற்கு பிறகு அக்சிலேட்ரட் முறை கொண்டு வரப்படும். அப்போது விற்கப்படாத பட்டியலில் உள்ள வீரர்களில் சிலர் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் ஏலத்திற்கு வருவர்.
ஒரு அணியில் மொத்த வீரர்களின் எண்ணிக்கை என்ன?
ஒவ்வொரு உரிமையாளரும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சமாக 25 வீரர்களையும் கொண்டிருக்கலாம். அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 8 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழக வீரர்களுக்கு ஓய்வூதியம் அறிவிப்பு!
“கவுன்சிலர் தேர்தலில் பன்னீர் ஜெயிச்சி காட்டட்டும்!” – ஜெயக்குமார் பதிலடி