IPL Auction : ஆர்டிஎம் செயல்முறை மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியால் அர்ஷ்தீப் சிங்ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள 18வது ஐபிஎல் தொடரை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் ஐபிஎல் மெகா ஏலம் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.
இதில், ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற முன்னணி இந்திய வீரர்களுடன் மொத்தம் மொத்தமாக 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏலத்துக்காக 120 கோடி ரூபாய் செலவு செய்யலாம். இருப்பினும் அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக கணிசமான தொகையை ஏற்கனவே பயன்படுத்தி விட்டதால் மீதமுள்ள தொகையுடன் ஏலத்தில் பங்கேற்க உள்ளன.
அதிகபட்சமாக இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 110 கோடியே 50 லட்சம் ரூபாயுடன் ஏலத்தில் அமர்ந்துள்ளது.
அர்ஷ்தீப் சிங்!
இந்த நிலையில் இன்று மதியம் 4 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக இந்தியாவைச் சேர்ந்த இளம் (25 வயது) வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ரூ. 18 கோடிக்கு ஆர்.டி.எம். முறையை பயன்படுத்தி பஞ்சாப் கிங்ஸ் திரும்ப பெற்றுள்ளது.
அவரை ஏலத்தில் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடுமையாக போராடி ரூ.15.75 கோடிக்கு வாங்கியது. எனினும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ. 18 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஐபிஎல் தொடரில் வலுவான வீரராக கருதப்படும் அவர், 60 டி20 போட்டிகளில், 94 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஜாம்பவான்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை வீழ்த்தி இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 96 விக்கெட்டுகளுன் யுஸ்வேந்திர சாஹல் உள்ளார்.
ஆர்.டி.எம். விதி!
தக்க வைத்துக் கொள்ளப்பட்ட வீரர்களை தவிர்த்து, ஆர்.டி.எம். முறையில் கடந்த சீசனில் தங்கள் அணியில் விளையாடிய ஒரு வீரரை மெகா ஏலத்தின் போது மீண்டும் அந்த அணி தக்கவைக்க வழிவகை செய்கிறது.
ஒரு அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர், மீண்டும் ஏலத்தில் கலந்து கொள்ளும் போது அவரை மற்ற அணிகள் விலைக்கு வாங்க முயற்சிக்கலாம். அதேநேரம் அந்த வீரரை மீண்டும் அந்த அணியே தக்கவைக்க விரும்பும் பட்சத்தில் அந்த நேரத்தில் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மெகா ஏலத்தில், பழைய அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தினால், ஏலத்தில் அந்த வீரருக்கு கடைசியாக விற்கப்பட்ட ஏலத்திற்கு சமமான தொகையையோ அல்லது அதற்கு அதிகமான தொகையையோ செலுத்த வேண்டும்.
மறுபுறம், பழைய அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தவில்லை என்றால், கடைசியாக ஏலம் எடுத்த அணி அந்த வீரரை வாங்கிக் கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”தயவுசெய்து விட்டுவிடுங்கள்” : அரசியல்வாதிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜி கோரிக்கை!