சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 26) நடைபெறும் ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இறுதிக்கட்டத்தில் ஐபிஎல் 2024:
ஐபிஎல் 2024 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் 2024 தொடரில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில், ப்ளே ஆஃப் மூலமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
முதல் குவாலிஃபையர் சுற்றில், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இதில், கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூரு அணியை வீழ்த்தியதன் காரணமாக குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
குவாலிஃபையர் 2வது சுற்றில் ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகள் மோதின. இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 26) நடைபெறும் ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இறுதிப்போட்டியில் மழைப் பாதிப்பு?
கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளின் வீரர்கள் ஐபிஎல் 2024 கோப்பையை வெல்லும் தீவிர முயற்சியிலும், பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போட்டியை காண ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இறுதிப்போட்டி நடைபெறும் சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சாரல் மழை பெய்ததால் பயிற்சி பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், போட்டி தொடங்கும் நேரத்தில் மழை வர வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் நீண்டநேர மழை இருக்காது என்றும், போட்டி உறுதிசெய்யப்பட்ட நாளில் நிறைவுபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் எதிர்பார்க்காத வகையில் ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது மழை குறுக்கிட்டால், போட்டியானது ரிசர்வ் டேவான மறுநாளுக்கு அதாவது நாளை (மே 27) தள்ளிவைக்கப்படும்.
ஆனால் அதற்கு முன் இறுதிப்போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலேயே போட்டியை முடிக்கும் விதமாக கூடுதலாக 120 நிமிடங்கள் காத்திருக்கப்படும்.
மேலும், மழை தொடர்ந்தால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டு ரிசர்வ் டேவான நாளை போட்டி நடத்தப்படும்.
நாளை (மே 27) நடைபெறும் போட்டியின்போதும் மழை வந்து போட்டி கைவிடப்பட்டால், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.
இப்போதைய நிலையில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!- முழு விவரத்தைப் பாருங்க…
ஒடிசாவை கொள்ளையடிக்கும் தமிழக கான்ட்ராக்டர்கள்: மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஸ்மிருதி இரானி