சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் போட்டி, இன்று (மே 29) இரண்டு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியை வந்தடைந்துள்ளது. இந்த அணிகளில் கோப்பையை வெல்லப் போவது யார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் – சென்னை அணிக்கு இடையேயான இறுதிப் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் குஜராத் அணியில் கில்லியாக பேட்டிங் செய்யும் கில்லின் விக்கெட்டை எடுப்பது சென்னை அணிக்கு முதல் சவாலாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 20 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து அதிரடி காட்டி வந்த கில்லின் விக்கெட்டை மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து வீழ்த்தினார் தோனி. இதன் மூலம் குஜராத் அணியின் முதல் விக்கெட்டை எடுத்தார்.
தொடர்ந்து மற்ற தொடக்க வீரரான சஹா 39 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சர் அடித்து 54 ரன்களில் கேட்ச் அவுட்டானார்.
3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய சென்னை வீரர் சாய் சுதர்சன் சிஎஸ்கே பவுலர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டு அதிரடி காட்டினார். 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 96 ரன்கள் எடுத்திருந்த சுதர்சன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டமிழந்து குஜராத் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
தொடர்ந்து, கேப்டன் ஹர்தீக் பாண்ட்யா 2 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர் இறுதியில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் கோப்பையைக் கைப்பற்றி விடலாம் என்ற இலக்கோடு சென்னை அணி களமிறங்க உள்ளது.
குறிப்பாக சிஎஸ்கே அணியில் தமிழகத்தை சேர்ந்த ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை. ஆனால் சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அதிரடி காட்டிய சென்னை வீரர் சுதர்சனை முன்பே சிஎஸ்கே அணியில் சேர்த்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
மோனிஷா
விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன்!
போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்!