ஐபிஎல் கோப்பை: ஆந்திர முதல்வரை சந்தித்த அம்பத்தி ராயுடு

விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் சிஎஸ்கே அணி உரிமையாளர் ரூபா குருநாத் ஆகியோர் ஆந்திர முதல்வரை இன்று(ஜூன் 8) சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த 16 வது ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

இதையடுத்து, ஐபிஎல் கோப்பை சென்னைக்கு எடுத்து வரப்பட்டு தியாகராய நகரில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து ஐபிஎல் கோப்பைக்கு பூஜை போடப்பட்டது.

பின்னர், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிலையில், அம்பத்தி ராயுடு மற்றும் ரூபா குருநாத் ஆகியோர் ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

இதனிடையே, அம்பத்தி ராயுடு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணையப்போகிறார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

காரணம் , அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி இந்துவுக்கு அளித்த பேட்டியில், “படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த எண்ணம் தான், என்னையும் அரசியலில் நுழைய தூண்டுகிறது.

சில கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்ததும், முடிவெடுப்பேன். கிரிக்கெட் வீரராக இருந்ததால் சிவில் சர்வீஸுக்குள் நுழைய வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது அதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. எனது முடிவை உரிய நேரத்தில் அறிவிப்பேன்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நிதி ஒதுக்கீடு: 5ஜி அலைக்கற்றையுடன் களமிறங்கும் பிஎஸ்என்எல்!

“தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் உள்ளனர்” – சந்திரசேகரன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *