2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் ஏலம் எடுக்கப்பட்டதை நினைத்து நான் மிகவும் பயந்தேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷாபாஸ் அகமது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆர்.சி.பி அணி, தங்களது ஐபிஎல் கோப்பை கனவை நிறைவேற்றிக் கொள்ளப் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக பல திறமையான வீரர்களை ஆர்.சி.பி தனது அணியில் சேர்த்துள்ளது. எனவே ஆர்.சி.பி அணி தனது ஐபிஎல் கோப்பை கனவை நிறைவேற்றிக் கொள்ளத் தீவிரமாகச் செயல்படும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆர்.சி.பி அணியின் சமீபத்திய பேட்டியில் பேசிய ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அகமது, ஆர்.சி.பி அணியால் தான் ஏலம் எடுக்கப்பட்டதை நினைத்துப் பயந்ததாகக் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், “2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்.சி.பி அணியால் நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. உண்மையில் சொல்ல வேண்டுமானால் எனக்கு அந்த நேரத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று நினைப்பார்கள். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஏலத்தில் எனக்கு வாய்ப்பிருப்பதாக ஐபிஎல் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் ஆர்.சி.பி என்னை வாங்கும் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால் நான் உண்மையில் ஏலத்தில் விற்காமல் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தேன். காரணம் ஐபிஎல் தொடரில் எந்த பிரச்சனையும் தலைதூக்குவதை நான் விரும்பவில்லை. நான் சரியான உடற்தகுதியுடன் இல்லை என்றால் ஐபிஎல் தொடர் வீணாகப் போகும்.
முதலில் எனது அணி வீரர் இஷான் போரல் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அடுத்ததாக எனது முறை. ஆனால், முதல் முயற்சியில் நான் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து நான் டிவியை ஆஃப் செய்து விட்டேன்.
ஆனால் ஏலம் முடிந்த பிறகு எனது நண்பர்கள் எனக்கு போன் செய்து, நான் ஆர்.சி.பி அணியால் ஏலம் எடுக்கப்பட்டதாக கூறினார்கள். இது எப்படி நடந்தது என்று நான் நினைத்துக்கொண்டேன். மேலும் எனக்கு மிகப்பெரிய பயம் என்னவென்றால் நான் ஆர்.சி.பி அணியால் வாங்கப்பட்டதுதான். விராட் கோலி அந்த நேரத்தில் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார்.
எனக்கு சரியாக பீல்டிங் செய்ய வராது. ஆனால் விராட் கோலி சிறப்பாக பீல்டிங் செய்வார் மற்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார். நல்வாய்ப்பாக கோவிட் ஊரடங்கில் நான் தோள்பட்டை சிகிச்சை மேற்கொண்டேன். பின்னர் நான் ஆர்.சி.பி அணியின் பயிற்சி முகாமில் சேரும் போது சரியான உடல்தகுதியுடன் இருந்தேன்” என்று பேசியுள்ளார்.
மோனிஷா
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!