ஐபிஎல் தொடர் துவங்கினாலே, ‘தல’ தோனியை மீண்டும் களத்தில் பார்க்கலாம் என்ற உற்சாகம் அவரது ரசிகர்களிடையே நிறைந்திருக்கும்.
ஆனால், மறுபுறத்தில் அவர் ஓய்வை அறிவித்துவிடுவாரோ என்ற அச்சமும் மனதில் ஆழ்ந்திருக்கும்.
அப்படி, ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடர் முடியும்போதும், ஓய்வு குறித்து எழுப்பப்படும் கேள்விக்கு, தல தோனி அளிக்கும் ‘Definitely Not!’ பதிலை, ரசிகர்கள் ஒரு திருவிழா போலவே கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்.
இப்படியான சூழலில், வருகின்ற 17-வது ஐபிஎல் தொடரில், தோனி தனது 42-வது வயதில் மீண்டும் ஒருமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார்.
சென்னையில் இந்த தொடருக்கான பயிற்சியை ஏற்கனவே தோனி துவங்கிவிட்ட நிலையில், அவர் பயிற்சி செய்யும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் தங்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
“தோனி இருசக்கர நாற்காலியில் இருந்தாலும் கூட சிஎஸ்கே அணி அவரை விளையாட வைக்கும். ‘சேரில் இருந்து எழுங்கள், பேட் செய்யுங்கள், திரும்ப சேரில் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்பதே சென்னை அணியின் விருப்பமாக இருக்கும்.
ஆனால், பேட்டிங் அவருக்கு (தோனி) ஒரு பிரச்சனை அல்ல. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே பேட்டிங் அவருக்கு ஒரு பிரச்சனை அல்ல.
பிரச்சனை விக்கெட் கீப்பிங்கில் தான். வயதாக, வயதாக முழங்கால்களில் தேய்மானம் ஏற்படும். தோனிக்கு விக்கெட் கீப்பிங் மிகவும் பிடிக்கும்.
ஒருவேளை அவரால் கீப்பிங் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், அதன் காரணமாகவே அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்”, என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2023 ஐபிஎல் தொடரின்போதே முழங்கால்களில் பிரச்சனையை சந்தித்த தோனி, அந்த தொடர் முடிந்தவுடனேயே அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
பின்னர், நீண்ட நாட்கள் ஓய்வுக்கு பிறகே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். இந்நிலையில், ராபின் உத்தப்பாவின் இந்த கருத்து, ரசிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஒரு ஜாம்பவானாக கருதப்படும் தோனி, இந்த தொடரில் 5,000 ரன்களை கடந்த 7 வீரர்களில் ஒருவராக உள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார்.
அதேபோல, ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸ்களை விளாசிய வீரர்கள் பட்டியலில், தோனி 239 சிக்ஸ்களை பறக்கவிட்டு 4-வது இடத்தில் இருக்கிறார்.
அது மட்டுமின்றி இதுவரை 218 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 135.92 என்ற சிறப்பான நிலையில் உள்ளது.
இது பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி (130.02) மற்றும் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா (130.05) ஆகியோரின் ஸ்ட்ரைக் ரேட்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திர நன்கொடையில் இந்தியாவிலேயே நம்பர் 1..யார் இந்த லாட்டரி மார்ட்டின்?