RCB vs LSG: சொந்த மண்ணில் தொடர் தோல்விகளை சந்திக்கும் பெங்களூரு
RCB vs LSG: 2024 ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் நேற்று (ஏப்ரல் 2) மோதிக்கொண்டன.
இரு அணிகளுமே இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், 2வது வெற்றியை நோக்கி களமிறங்கியது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, லக்னோ அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குவின்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல், அந்த அணிக்கு ஒரு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால், கே.எல்.ராகுல் 6வது ஓவரில் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பவர்-பிளே முடிவில் லக்னோ அணி 54 ரன்கள் சேர்த்திருந்தது.
அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் இப்போட்டியிலும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், மறுமுனையில் டி காக் ரன்களை சேர்த்துக்கொண்டே இருந்தார்.
பின் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன்களுக்கு வெளியேற, 81 ரன்கள் சேர்த்திருந்தபோது டி காக் விக்கெட்டை வீழ்த்தினார் ரீஸ் டாப்லே. இதன்மூலம், லக்னோ அணியின் ரன்ரேட்டை பெங்களூரு அணி சற்று கட்டுப்படுத்தியது.
ஆனால், அடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன் கடைசி 2 ஓவர்களில் 5 சிக்ஸ்களை பறக்கவிட, லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் குவித்தது.
182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, கோலி, டு பிளெசிஸ், மேக்ஸ்வெல் அடங்கிய அதன் நட்சத்திர டாப் ஆர்டர் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
விராட் கோலி 22 ரன்களுக்கும், ஃபாஃப் டு பிளெசிஸ் 19 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களுக்கு இடையில், ரஜத் படிதார் 29 ரன்களை சேர்த்து வெளியேறினார்.
பின் வந்த அனைவருமே, அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். இதன் காரணமாக, ஆர்சிபி அணி 153 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணிக்காக மஹிபால் லோம்ரோர் மட்டும் 13 பந்துகளில் 33 ரன்கள் விளாசி ஆறுதல் அளித்தார்.
இதன்மூலம், 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தனது சொந்த பெங்களூரு சின்னசாமி மைதானத்திலேயே தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்துள்ள பெங்களூரு, புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
லக்னோ அணிக்காக, 4 ஓவர்களை வீசி வெறும் 14 மட்டுமே வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றிய மயங்க் யாதவ் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
பியூட்டி டிப்ஸ்: வேனல் கட்டியிலிருந்து விடுதலை பெற…
ஹெல்த் டிப்ஸ்: கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : வெள்ளரி சாப்ஸ்