பெங்களூர் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் தருணத்திற்காகத் தான்.
16 வருடங்களாக அந்த அணிக்கு ஆடிவரும் உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலிக்கு, இது ஒரு பெரும் மனக்குறையாகவே உள்ளது.
கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய போதும் கூட ஐபிஎல்லின் கடைசி தருணம் வரை, ஆர்சிபி தான் வேறு அணிக்கு செல்வதில் விருப்பம் இல்லை என கோலி தெரிவித்து விட்டார்.
இதையடுத்து கோலிக்காகவாது அந்த அணி கோப்பை வெல்ல வேண்டும் என, கிரிக்கெட் ரசிகர்களே வேண்டிக்கொள்ளும் அளவுக்குத்தான் பெங்களூர் அணியின் நிலைமை உள்ளது.
இத்தனைக்கும் உலகின் தலைசிறந்த வீரர்கள் அனைவரையும் ஏலத்தில் எடுத்து ஏதோதோ செய்து பார்த்தும், கோப்பையை ஏந்தி உச்சிமுகர பெங்களூர் அணியால் முடியவில்லை.
மறுபுறம் சொல்லி வைத்தது போல, அந்த அணியில் விளையாடிய வீரர்கள் இப்போது வேறு அணிகளில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.
இதற்கிடையில் 17-வது ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த ஆண்டாவது பெங்களூர் அணி கோப்பை வெல்லுமா? என ரசிகர்களும் வழக்கம்போல எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி ஆஸ்திரேலியாவை வீழ்த்திடக் காரணமான 24 வயது வெஸ்ட் இண்டீஸ் வீரர் சமர் ஜோசப்பினை பெங்களூர் அணி ரூபாய் 1.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்போகிறதாம்.
அதற்குப்பதிலாக டாம் கரணை நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறதாம். ஐபிஎல் விதிகளின்படி ஒரு வீரர் காயம் அடைந்தால் தான் பதிலுக்கு வேறு வீரரை எடுக்க முடியும் என்பதால், டாம் கரன் தானாக விலகிக்கொள்ள முடிவு செய்திருக்கிறாராம்.
எனவே இதற்கு பின்னால் பணம் பெரியளவில் விளையாடி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்றாலும் ஆர்சிபி அணிக்கு ஒரு நல்லது நடந்தால் போதும் என ரசிகர்கள் நினைப்பதால், இதுகுறித்து பெரியளவில் விமர்சனங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
விரைவில் சமர் ஜோசப்பின் வருகையை பெங்களூர் அணியே முறைப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யாரு அன்ஃபிட்… ஸ்டாலின் தான் அன்ஃபிட்: டி.ஆர்.பாலுவுக்கு எதிராக கொந்தளிக்கும் பாஜக!
மத்திய அமைச்சராக இருக்க எல்.முருகனுக்கு தகுதியில்லை: டி.ஆர்.பாலு ஆவேசம்!