ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை-மும்பை இடையிலான, ‘எல் கிளாசிகோ’ போட்டி இன்று (ஏப்ரல் 14) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
ரசிகர்களால் செல்லமாக மம்பட்டி என அழைக்கப்படும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையில் களம் காணுகிறது.
அதேபோல கடப்பாரை என அழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்குகிறது.
இரண்டு அணிகளுமே ஆளுக்கு தலா 5 கோப்பைகளை வைத்துள்ளது. இதனால் 6-வது கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
நடப்பு தொடரினைப் பொறுத்தவரை மும்பை அணி 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவி 7-வது இடத்தில் இருக்கிறது.
சென்னை அணி 2 தோல்விகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது. கடைசி 2 போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஹாட்ரிக் வெற்றிக்கு அந்த அணி கடுமையாக போராடும்.
2 தோல்விகளுக்கு பிறகு சென்னை அணி கடந்த போட்டியில் வெற்றியைப் பெற்று பார்முக்கு திரும்பி இருக்கிறது. எனவே வெற்றியினை தக்க வைத்திட சென்னை அணியும் சண்டையிடும்.
எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது. அதோடு ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரோஹித்-தோனி இருவருமே, கேப்டனாக இல்லாமல் சந்திக்கும் முதல் ஆட்டம் இது.
தோனி வான்கடே மைதானத்தில் கேப்டனாக இல்லாமல் ஆடுவது இதுவே முதல்முறை ஆகும். மேலும் நடப்பு தொடருடன் தோனி ஓய்வு பெறவிருப்பதால், வான்கடேவில் அவரின் கடைசி போட்டியாகவும் இது இருக்கலாம்.
எனவே இன்றைய போட்டி கடைசி வரை திரில்லாக செல்லும் என்றும், நல்ல ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் கடந்த சில நாட்களாகவே, சமூக வலைதளங்களில் #MIvsCSK என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முத்ரா கடன் ரூ.20 லட்சம்… புல்லட் ரயில்: பாஜகவின் டாப் 10 கேரண்டி!
மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி?
ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!