IPL 2024 : அபார வெற்றி… ஹைதராபாத் அணியை பழி தீர்த்தது சென்னை!

Published On:

| By christopher

IPL 2024: CSK avenged SRH at chepauk

சேப்பாக்கத்தில் இன்று(ஏப்ரல் 28) நடைபெற்ற லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் 2௦24 தொடரின் 46வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இன்று எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.

சதத்தை தவறவிட்ட கேப்டன்!

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் 2 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் – டேரில் மிட்செல் ஜோடி அதிரடியாக விளையாடி 126 ரன்கள் குவித்தது.

மிட்செல் அரைசதம்(52) அடித்து வெளியேறினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ருதுராஜ் 98 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தோனியின் சாதனை!

பின்னர் களமிறங்கிய துபே 4 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் குவித்த நிலையில், கடைசி ஓவரில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே களம் கண்ட தோனி 2 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம் நடப்பு தொடரில் தான் பேட்டிங் செய்த 7 போட்டிகளிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

துஷாரின் தூள் பந்துவீச்சு!

தொடர்ந்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் துஷார் தேஷ்பாண்டே.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசிய அவர் டிராவிஸ் ஹெட்(13) மற்றும் அன்மோல்ப்ரீத் சிங்(0) ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்த பந்தில் கைப்பற்றினார்.

தொடர்ந்து தனது அடுத்த ஓவரில் அபிஷேக் சர்மாவின்(15) விக்கெட்டையும் எடுத்தார் துஷார்.

அடுத்த 4வது விக்கெட்டுக்கு மார்கரம் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் ஜோடி சேர்ந்து அணியை காப்பாற்ற கடுமையாக முயற்சித்தனர். ஆனால் ஜடேஜாவின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து நிதிஷ் வெளியேற, மதீஷா பதிரானா பந்துவீச்சில் மார்க்ரம் (32) ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் தொடர்ந்து களமிறங்கிய கிளாசென் (20), அப்துல் சமத் (19) பேட் கம்மின்ஸ் (5) சபாஷ் அகமது(7)  உனத்கட் (1) ஆகியோர் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

இதனால் ஹைதராபாத் அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பதிரானா மற்றும் முஸ்தபிஷூர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

புள்ளி பட்டியலில் 3வது இடம்!

முன்னதாக ஹைதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் SRH அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி கண்டிருந்த நிலையில், இன்று தங்களது சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில் அபார வெற்றி பெற்றி பழி தீர்த்துவிட்டது.

மேலும் இந்த வெற்றியுடன் 10 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது CSK அணி. அதேவேளையில் 3வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு பின் சென்றது ஹைதராபாத்.

10 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 98 ரன்கள் குவித்த சென்னை அணி கேப்டன் ருதுராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

“என்னது ரேஷன்ல கோதுமை பீரா?”: அப்டேட் குமாரு

ஐபிஎல் 2024: குஜராத்தை அசால்டாக தட்டி தூக்கிய RCB

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel