ருத்துராஜ் தலைமையிலான சென்னை அணி பெங்களூரை வீழ்த்தி, 17-வது ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
நேற்று (மார்ச் 22) இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – பெங்களூரு அணிகள் இடையிலான முதல் ஐபிஎல் போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அந்த அணிக்கு விராட் கோலி, பிளசிஸ் இருவரும் ஓபனிங் வீரர்களாக இறங்கினர்.
துவக்கம் முதலே அதிரடி காட்டிய பிளசிஸ் 35 ரன்களில் முஸ்தாபிசுர் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அந்த அணியின் சரிவு தொடங்கியது.
முஸ்தாபிசுர் ரஹ்மானின் மாயஜால பந்துவீச்சால் 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. என்றாலும் தினேஷ் கார்த்திக்-அனுஜ் ராவத் அதிரடி கூட்டணியால் ஆர்சிபி 2௦ ஓவர்கள் முடிவில் 173 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 174 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு கேப்டன் ருத்துராஜ்- ரச்சின் ரவீந்திரா இருவரும் அதிரடி துவக்கம் கொடுத்தனர்.
அதிரடி துவக்கம் கொடுத்த ருத்துராஜ் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். என்றாலும் ரச்சின் ஆர்சிபியின் பந்துவீசினை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்கு ஒன் டவுன் இறங்கிய ரஹானேவும் நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.
ஆர்சிபி பந்துவீச்சினை வெளுத்து வாங்கிய ரச்சின் 37 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த டேரில் மிட்செலும் ஆர்சிபிக்கு மரண பயத்தை அளித்தார்.
ஆனால் மும்பையில் இருந்து ஆர்சிபிக்கு வந்த கேமரூன் கிரீன் அடுத்தடுத்து ரஹானே (27), மிட்செல் (22) இருவரையும் வெளியேற்றி, சென்னைக்கு செக் வைத்தார்.
இதனால் சென்னை அணி 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு லேசாக ஜெர்க் கொடுத்தது. பழக்கதோஷத்தில் பலரும் நகம் கடித்து காத்திருந்தனர்.
இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய சிவம் துபேவும், சென்னை அணியின் செல்லப்பிள்ளை ஜடேஜாவும் இணைந்து கடுமையாக போராடி சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
பொறுப்புடன் ஆடிய துபே 37 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும் எடுத்து சென்னை அணியின் பெயரில் முதல் வெற்றியை பதிவு செய்தனர்.
18.4 ஓவர்களிலேயே சென்னை அணி இலக்கை எட்டியதால், 2 புள்ளிகளுடன் நல்ல ரன் ரேட்டும் அணிக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
CSK vs RCB: அதிரடி காட்டிய ஆர்சிபி… முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை?
அரசாங்கத்தை மாற்றிய பாமக: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு வந்த அழுத்தம்… சௌமியா களமிறங்கிய பின்னணி!