கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.
ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (மே 11) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கிற்கு களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.
கொல்கத்தா அணியில், ஜேசன் ராய் (10), ரஹ்மத்துல்லா குர்பாஸ் (18) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆரம்பத்திலேயே தடுமாறிய கொல்கத்தா அணியில் தொடர்ந்து, கேப்டன் நித்திஷ் ராணா (22), வெங்ககேஷ் ஐயர் (57), ஆண்ட்ரே ரசல் (10), ரிங்கு சிங் (16) என சுமாரான ரன்களில் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் அணி சார்பில் சாஹல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ருத்ரதாண்டவம் ஆடினர்.
ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 48 ரன்களும் எடுத்திருந்தனர். குறிப்பாக ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே 26 ரன்கள் (6,6,4,4,2,4) அடித்து, முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பிரித்வி ஷா சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் பிரித்வி ஷா 24 ரன்கள் எடுத்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது.
மேலும் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் கேஎல் ராகுல் 2018-ல் டெல்லிக்கு எதிராகவும் பட் கமின்ஸ் 2022-ல் மும்பைக்கு எதிராகவும் தலா 14 பந்துகளில் அரை சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.
இதனால் வெறும் 1 விக்கெட் இழப்பிற்கு 13.1 ஓவரில் ராஜஸ்தான் அணி இலக்கை அடைந்தது. 151 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கின்றது. மேலும் அதிரடியாகச் செயல்பட்ட ஜெய்ஸ்வால் நேற்றைய ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருதினை கைப்பற்றினார்.
அதுமட்டுமின்றி இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், பெங்களுரு அணியின் வீரருமான விராட் கோலி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நான் பார்த்த சிறந்த பேட்டிங் இது” என்று பதிவிட்டுள்ளார்.
மோனிஷா
குடிபோதையில் யானையை விரட்டிய போதை ஆசாமி
முதல்வரின் புகைப்பட கண்காட்சி : தொடங்கி வைத்த எ.வ.வேலு, ஜெயம் ரவி