பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மார்ச் 31 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று (ஏப்ரல் 8) இரவு 14வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் சாம் கரனை (22*) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறினர்.
ஆனால் மறுபுறம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 66 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதனால் 20 ஓவர் இறுதியில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மார்கண்டே 4 விக்கெட்டுகளையும் ஹான்சன் மற்றும் உம்ரன் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் 1 விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.
இதனையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது ஹைதராபாத் அணி. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் – ஹாரி ப்ரூக் இணை களமிறங்கியது.
பெரிதும் எதிர்பார்த்த ஹாரி ப்ரூக் 13 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வாலும் 21 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆனால் 3 மற்றும் 4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ராகுல் திரிபாதி மற்றும் கேப்டன் மார்கரம் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக விளையாடி வந்தனர்.
இந்த இணை 111 ரன்களை குவித்த நிலையில் 17.1 ஓவரில் ஹைதராபாத் அணி இலக்கை அடைந்தது. வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஹைதராபாத் கிங்ஸ் அணி.
இதன்மூலம் தொடர்ந்து முதல் 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவி வந்த ஹைதராபாத் ஐபிஎல் லீக் போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவினாலும், தனி ஆளாக நின்று அணிக்காக 99 ரன்களை குவித்த ஷிகர் தவானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து இன்றைய லீக் ஆட்டத்தில், ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதவுள்ளன.
மோனிஷா
வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு!
விவசாயப் பணிகளிலும் களமிறங்கிய வடமாநிலத் தொழிலாளர்கள்!