ipl 2023 PBKS vs RR

PBKS vs RR: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த ராஜஸ்தான்

விளையாட்டு

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 19) இரவு 7.30 மணிக்குத் தொடங்கிய 66வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இந்த ஆட்டம் கடைசி லீக் போட்டி என்பதால், இதில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்பை தக்க வைக்க முடியும் என்று களமிறங்கின.

ipl 2023 PBKS vs RR

தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த அதர்வா டைட் அதிரடியாக விளையாட முயற்சித்து 19 ரன்களிலும் மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் ஷிகர் தவான் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லியான் லிவிங்ஸ்டன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பஞ்சாப் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம் கரண் – ஜிதேஷ் சர்மா இருவரும் ஆரம்பத்தில் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதனால் 5வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து சிறப்பாக செயல்பட்டு வந்த நேரத்தில் ஜிதேஷ் சர்மா 3 பவுண்டரி 3 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து 14வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய தமிழக வீரர் சாருக்கான் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41 ரன்களும், சாம் கரண் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 49 ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தனர்.

குறிப்பாக சஹால் பந்து வீசிய 19வது ஓவரில் 28 ரன்களை குவித்து அதிரடி காட்டினர் சாம் கரண் – சாருக்கான் ஜோடி. இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். பஞ்சாப் அணியின் ரபாடா பந்துவீசிய 2வது ஓவரில் ஜோச் பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் உடன் இணைந்த தேவ்தூத் படிக்கல் அதிரடியாக விளையாடி 10 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துக் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசி 8 பவுண்டரியுடன் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக விளையாடியதால் வெற்றியை நெருங்கிய ராஜஸ்தானுக்கு 5 ஓவரில் 47 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களமிறங்கிய ரியான் பராக் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதிரடியாக விளையாடி வந்த ஹெட்மையர் பஞ்சாப் பவுலர்களின் பந்துகளை பறக்கவிட்டு 4 பவுண்டரி 3 சிக்சருடன் 46 ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக மாறியது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியின் ராகுல் சஹர் பந்து வீசினார். அப்போது களமிறங்கிய துருவ் ஜுரேல் 4வது பந்தில் சிக்ஸரை விளாசி 10 ரன்கள் எடுத்ததால் 19.4 ஓவரில் ராஜஸ்தான் அணி இலக்கை அடைந்தது.

6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்தது. இதுவரை ஆடிய ஆட்டங்களில் 8 தோல்விகளைப் பதிவு செய்த பஞ்சாப் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியது.

மறுபுறம் 14 போட்டிகளில் 7வது வெற்றியைப் பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியது.

ஆனாலும் பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் தங்களுடைய கடைசி போட்டியில் தோற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறலாம் என்று காத்திருக்கிறது ராஜஸ்தான்.

மோனிஷா

காதல், அன்பு, பக்தி… வித்தியாசம் என்ன?

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *