பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. நேற்று (மே 3) இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ப்ரப்சிம்ரன் சிங் மற்றும் மேத்தியூ ஷார்ட் களமிறங்கினர். இதில் ப்ரப்சிம்ரன் 9 ரன்களில் ஆட்டமிழக்க மேத்தியூடன் கேப்டன் ஷிகர் தவான் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிகர் தவான் 30 ரன்களில் பியூஸ் சாவ்லா சுழலில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து லியம் லிவிங்ஸ்டன் களமிறங்கி அதிரடியை துவங்கிய நிலையில் மேத்தியூ 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் லியம் லிவிங்க்ஸ்டன் உடன் இணைந்த ஜிதேஷ் சர்மா முதல் பந்திலிருந்தே ரன்களை சேர்க்க தொடங்கி மும்பை அணி பவுலர்களை திணற வைத்தார்.
குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட லிவிங்ஸ்டன் அரை சதமடித்து 7 பவுண்டரி 4 சிக்சருடன் 82 ரன்களும் ஜிதேஷ் சர்மா 5 பவுண்டரி 2 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தனர்.
இதனால் 20 ஓவரி இறுதியில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் களமிறங்கினர்.
இதில் ரோகித் முதல் ஓவரிலேயே ரிஷி தவான் வீசிய பந்தில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால் அடுத்ததாக களமிறங்கிய கேமரூன் கிரீன் கிஷானுடன் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய 360 டிகிரி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் பஞ்சாப் பவுலர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். மறுபுறம் இஷான் கிஷானும் அதிரடியைக் காட்ட, 6வது ஓவரில் இணைந்த இந்த பார்ட்னர்ஷிப் 16வது ஓவர் வரை தொடர்ந்தது. 3வது விக்கெட்டிற்கு 116 ரன்கள் குவித்து மும்பையின் வெற்றியை உறுதி செய்த நிலையில் சூர்யகுமார் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷான் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 75 ஆட்டமிழந்தார். இதனை அடுத்து விளையாடிய டேவிட் 19 ரன்களும் மற்றும் திலக் வர்மா 26 ரன்களும் எடுத்து களத்தில் இருந்த போது மும்பை அணி 18.5 ஓவரிலேயே இலக்கை அடைந்தது.
4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ்.
வெறித்தனமாக பேட்டிங் செய்த மும்பை ஐபிஎல் வரலாற்றில் மொகாலி மைதானத்தில் 200+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாக சாதனை படைத்தது.
அத்துடன் ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் 213 ரன்களை வெற்றிகரமாகத் துரத்திய மும்பை இந்த போட்டியையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் 200+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற வரலாறும் படைத்துள்ளது.
மோனிஷா
ரேஷன் கடைகளில் கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழகம்!
சடலங்களைப் பதப்படுத்தும் ரசாயனம்: 130 கிலோ மீன்கள் பறிமுதல்!