ஐபிஎல் 2023… மிரட்டிய மார்க் வுட்: அடிபணிந்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!

விளையாட்டு

லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) 2023 மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சிஎஸ்கே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தொடர்ந்து 2வது நாளாக நேற்று (ஏப்ரல் 1) மாலை 3.30 மணிக்கு ஒரு போட்டியும் இரவு 7.30 மணிக்கு 2வது போட்டியும் தொடங்கியது.

இதில் இரவு தொடங்கிய லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனால் லக்னோ அணி பேட்டிங்கிற்கு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். எதிர்பாராத விதமாக கே.எல். ராகுல் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஆனால் மற்றொரு முனையில் கைல் மேயர்ஸ் சிக்சர், பவுண்டரிகள் எனப் பந்துகளைப் பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடினார். அரைசதம் அடித்து அசத்திய கைல் மேயர்ஸ் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆடிய லக்னோ அணியின் வீரர்களான தீபக் ஹோடா 17 ரன்களும், ஸ்டொயினிஸ் 12 ரன்களும், சற்று அதிரடியாக விளையாடி பூரன் 21 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 36 ரன்களும், இறுதிக்கட்டத்தில் கலக்கிய ஆயுஷ் பதோனி 7 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 18 ரன்கள் குவித்தார்.

இறுதியாக 20 ஓவர்களில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. கிருஷ்ணப்பா கவுதம் 6 ரன்களுடனும், க்ருணால் பாண்டியா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

டெல்லி அணியில் கலீல் அகமது, சக்காரியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ப்ரித்வி ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் 9 பந்துகளை சந்தித்த 12 ரன்கள் எடுத்திருந்த ப்ரித்வி ஷா மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய மார்ஷ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேற, சர்ப்ரஸ் கான் 4 ரன்களில் வீழ்ந்தார். இதனால் டெல்லி அணி 48 ரன்களுக்கு முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பிறகு 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் வார்னர், ரோஸவ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டது. இருவரும் அவ்வப்போது பவுண்டரி சிக்சர்களாக விளாசிய நிலையில், 20 பந்துகளைச் சந்தித்த ரோஸவ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, அரைசதம் அடித்த கேப்டன் வார்னர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல் மட்டும் 16 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

லக்னோ அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மார்க் வுட் 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆவேஷ்கான் மற்றும் பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும் மார்க் வுட் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

மோனிஷா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கீழடி: தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

ipl 2023 luknow super giants vs delhi capitals
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *