ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
ஐபில் தொடரின் 47வது லீக் போட்டியில் நேற்று (மே 4) இரவு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டால் வென்ற கொல்கத்தா அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் குர்பாஸ் களமிறங்கினர். இதில் குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க ஜேசன் ராய் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் அவுட்டானார்.
இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு அதிரடியாக ரன்களை சேர்த்தார் நிதிஸ் ரானா. அவருடன் இணைந்து ரிங்கு சிங்கும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நிதிஸ் ரானா 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுபுறம் அரைசதத்தை நெருங்கிய ரிங்கு சிங் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
கொல்கத்தா அணியில் அடுத்தடுத்து, ஆண்ட்ரே ரசல் 24 ரன்களும், நரைன் 1 ரன்னும், தாக்கூர் 8 ரன்களும், அனுகுல் ராய் 13 ரன்களும், வைபவ் அரோரா 2 ரன்களும் எடுத்திருந்த நிலையில், ஹர்ஷித் ரானா அவருக்கு வீசப்பட்ட முதல் பந்திலேயே ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் 20 ஓவர் இறுதியில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஹைதராபாத் அணி களமிறங்கியது.
ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இதில் அபிஷேக் 1 பவுண்டரியுடன் 9 ரன்களில் ஆட்டமிழக்க, மயங்க் அகர்வால் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 18 ரன்களில் ஹர்ஷித் ரானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 20 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் மார்க்ரம் நிதானமாக விளையாடி 41 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஹென்ரிச் கிளாசென் ஹைதராபாத் அணியில் 36 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில், கடைசி 5 ஓவரில் ஹைதராபாத் அணிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த கடைசி 5 ஓவரில் 3 ஓவரை கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி வீசினார். அதில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
இந்நிலையில், 20 ஓவர் இறுதியில், ஹைதராபாத் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 ஓவர்கள் பந்து வீசி வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஹைதராபாத் அணியின் தோல்விக்கும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்த வருண் சக்கரவர்த்தி நேற்றைய ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
மோனிஷா
பொறியியல் மாணவர் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!