IPL 2023: முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்
ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது குஜராத் அணி.
அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நேற்று (மே 15) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சஹா முதல் ஓவரிலேயே புவனேஸ்வர் வீசிய பந்துவீச்சில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில் மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் உடன் ஜோடி சேர்ந்தார் சாய் சுதர்சன்.
சாய் சுதர்சன் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்த மறுபுறம் சுப்மன் கில் ஹைதராபாத் பவுலர்களின் பந்துகளைப் பறக்கவிட்டார். 15 ஓவர் வரை நின்று ஆடிய இந்த ஜோடி 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சாய் சுதர்சன் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 47 (36) ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்கள், டேவிட் மில்லர் 7 ரன்கள், ராகுல் திவாடியா 3 ரன்கள் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையிலும் சுப்மன் கில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்து தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஷனகா 9 ரன்கள் மற்றும் மோகித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் களத்திலிருந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது.
ஹைதராபாத் அணியில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹைதராபாத் அணி. பவுலிங்கில் அதிரடி காட்டிய ஹைதராபாத் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டது.
முதல் ஓவரிலேயே அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் ஷர்மா 4 ரன்கள், ராகுல் திரிபாதி 1 ரன், கேப்டன் மார்க்ரம் 10 ரன்கள் என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தியதால் குஜராத்தின் வெற்றி அப்போதே உறுதியானது.
தொடர்ந்து சன்விர் சிங் 7 ரன்கள், அப்துல் சமத் 4 ரன்கள் என இளம் வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் தனது அனுபவத்தால் அவுட்டாகிய மோஹித் சர்மா அடுத்துக் களமிறங்கிய மார்கோ யான்செனையும் 3 ரன்களில் காலி செய்தார்.
59 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 100 ரன்களை தாண்டுமே என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் தான் 5வது வீரராக களமிறங்கிய ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சரிவை சரிசெய்யப் போராடிய புவனேஸ்வர் குமார் 3 பவுண்டரியுடன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, மயங்க் மார்கண்டே 18 ரன்களுடனும், ஃபசல்ஹக் பாரூக்கி 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
20 ஓவர் இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத் அணி. இதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
மேலும் குஜராத் அணியில் ஷமி மற்றும் மோகித் ஷர்மா தலா 4 விக்கெட்டுகளையும் யாஷ் தயால் 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.
அதனால் 12 போட்டிகளில் 9வது தோல்வியைப் பதிவு செய்த ஹைதராபாத் இத்தொடரிலிருந்து 2வது அணியாக லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.
மறுபுறம் நடப்பு சாம்பியனான குஜராத் 13 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று, கடந்த ஆண்டை போலவே புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக முதல் அணியாகத் தகுதி பெற்றுள்ளது.
மோனிஷா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
சேலம் ஏற்காட்டில் 21ஆம் தேதி முதல் கோடை விழா!