கொல்கத்தாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 23) இரவு மோதின.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தொடர்ந்து முதலில் பேட்டிங்கிற்காக சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டேவோன் கான்வே – ருதுராஜ் ஜோடி களமிறங்கியது.
இந்த ஜோடி அதிரடியாக விளையாடி பவர் பிளே ஓவரில் 73 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடி வந்த இந்த ஜோடி ருதுராஜ் 35 ரன்களில் ஆட்டமிழந்ததால் பிரிந்தது.
இதனையடுத்து ரஹானே களமிறங்கி ஆட்டத்தை தொடங்கினார். மறுபுறம் அரைசதம் அடித்து 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கான்வே, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுழற்பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
4வது வீரராக களமிறங்கி ரஹானேவுடன் இணைந்த சிவம் தூபேவும் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டினார்.
அதிரடியாக விளையாடி வந்த ரஹானே 24 பந்துகளில் அரைசதம் அடிக்க சிவம் தூபே 20 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய ஜடேஜா 18 ரன்களில் ஆட்டமிழக்க, எம்.எஸ்.தோனி 2 ரன்கள் எடுத்து 20 ஓவர் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மறுபுறம் அதிரடி காட்டி வந்த ரஹானே ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்திருந்தார்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. சென்னை அணி 235 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
முன்னதாக 19வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஹைதராபாத் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்ததே அதிக ஸ்கோராக இருந்தது.
அதேபோல இந்த போட்டியில் மொத்தம் 18 சிக்சர்களை அடித்த சென்னை இந்த வருடம் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை அடித்த அணியாகவும் சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரி முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியைத் தழுவியது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 61 ரன்களும், ரிங்கு சிங் 53 ரன்களும், நிதீஷ் ரானா 27 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களும் எடுத்திருக்க மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மோனிஷா