சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு பின் அடுத்தடுத்ததாய் சர்வதேச போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கிறது சென்னை.
செப்டம்பர் 12 ம் தேதி மாலை 5 மணிக்கு சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் தொடரானது சென்னையில் துவங்கியது.
செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 18 வரை நடைபெற இருக்கும் இந்த போட்டியானது நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் போட்டி நடைபெறுவதால் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் மைதானம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளக்குகள் , புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளில் இருந்து டென்னிஸ் வீராங்கனைகள் வந்திருக்கிறார்கள். மகளிர் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் மற்றும் இரட்டையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.
கடைசியாக 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியானது தற்போது நடைபெறுவது என்கிற பெருமை மட்டுமல்லாமல் , மகளிருக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடத்தப்படுவதால், சென்னை மக்கள் மத்தியிலும் குறிப்பாக டென்னிஸ் பிரியர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒற்றையர் பிரிவில் பங்கேற்க உள்ள 32 வீராங்கனைகளில் 22 பேர் அவர்களின் தரவரிசையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, உக்ரைன், போலந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் முதல் இரண்டு இடங்களில் உள்ள அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தாண்டி ஆகியோரும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்கள்.
இந்த போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையான அங்கிதா ரெய்னாவை முதல் சுற்றிலேயே தோற்கடித்து தன்னுடைய ஆட்டத்தால் எல்லோருடைய கவனத்தையும் பெற்றிருக்கிறார் ஜெர்மனி வீராங்கனை தத்ஜானா மரியா.

முதல் சுற்றின் முதல் செட்டில் 6-0 என்ற கணக்கிலும், இரண்டாம் செட்டில் 6-1 என்ற கணக்கிலும் எடுத்து அங்கிதா ரெய்னாவை தோற்கடித்தார் மரியா. இதன் பின்பு தான் யார் இந்த தத்ஜானா மரியா என்ற கேள்வி எல்லோரது மத்தியிலும் எழுந்துள்ளது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை இவர். உலக டென்னிஸ் வரலாற்றில் மிக பிரம்மாண்டமாய் பார்க்கப்படக்கூடிய 2022ஆம் ஆண்டின், விம்பிள்டன் க்ராண்ட்ஸ்லாம் அரையிறுதி போட்டியில் கலந்துகொண்ட 35 வயது ஆன 6ஆவது வீராங்கனை தத்ஜானா மரியா தான்.
கைப்பந்து வீரரின் மகளான தத்ஜானா மரியா, தன்னுடைய கோச்சாக இருந்த முன்னாள் ஃப்ரென்ச் டென்னிஸ் வீரரான சார்லஸ் எதுவர்ட்டை 2013 ல் திருமணம் செய்து கொண்டார். முதல் பெண் குழந்தை பிறக்கும் போது விளையாட்டிலிருந்து சிறு இடைவெளி எடுத்துக்கொண்டார்.
பின் மீண்டும் அதை விட அதிகமாய் விளையாடவும், வெற்றியை குவிக்கவும் ஆரம்பித்தார் தத்ஜானா மரியா.

இவர் எங்கெல்லாம் டென்னிஸ் விளையாடினாலும் தனக்கே உரிய பாணியில் ஆட்டத்தை தன்வசப்படுத்துவார். அந்த வகையில் மகளிர் டபிள்யூடிஏ டூர் ஒற்றையர் பிரிவில் 2018ஆம் ஆண்டு மல்லோர்க்காவிலும் , 2022 ம் ஆண்டு கோப்போ கோல்சானிடாஸிலும் வென்று டென்னிஸ் சாம்ராஜ்ஜியத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்தார்.
2022 ஆம் ஆண்டின் விம்பிள்டன் ஆட்டத்தில் இரண்டாவது சுற்றில் உலகின் நம்பர் 5 இடத்தில் உள்ள மரியா சக்காரியையும் , அதே ஆட்டத்தின் பதினாறாவது சுற்றில் ஜெஸினா ஒஸ்டாபென்கோவையும் எதிர்த்து வென்றார்.

இதன் மூலம் தான் விம்பிள்டன் காலிறுதியில் முன்னேறிய மிக வயதான வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
அது மட்டுமில்லாமல் மூன்றாவது செட்டில் 97 வது இடத்தில் இருந்த சக நாட்டவரான ஜூல் நியமேரையும் தோற்கடித்து விம்பிள்டன் அரையிறுதிக்கும் முன்னேறினார். 1975ஆம் ஆண்டு விம்பிள்டன் க்ராண்ட்ஸ்லாமில் இடம்பிடித்த மார்கரேட் கோர்ட்டுக்கு பிறகு, விம்பிள்டனில் முதல் நான்கு இடத்தில் இடம் பெற்றவர் தத்ஜானா மரியா தான்.
சர்வதேச ரேங்கிங் பட்டியலில் 84வது இடத்தில் இருக்கிறார் தத்ஜானா மரியா. ஆஸ்திரேலியா மற்றும் ஃப்ரென்ச் ஓப்பன் தொடரின் ஒற்றையர் பிரிவில் தலா இரண்டு முறை மூன்றாம் இடமும் , அமெரிக்க ஓபன் தொடரில் தலா மூன்று முறை மூன்றாம் இடமும் பிடித்திருக்கிறார்.
இவர் விளையாடிய விளையாட்டுகளை ரசிகர்கள் வியந்து பார்த்தது போலவே, குடும்பம் என்று ஆன பிறகும் கூட இவ்வளவு அருமையாக விளையாட்டு வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் அற்புதமாக கையாள்கிறார் என்று வியந்து பார்க்கிறார்கள்.
ஆனால் தத்ஜானா மரியா அதை இலகுவாய் கடந்து செல்கிறார். “என் குடும்பம் தான் என்னுடைய முழு வெற்றிக்குமே காரணம்.அவர்களால் தான் இன்னும் அதிக ஈடுபாடுடன் விளையாடுகிறேன் என்றும் என்னுடைய மூத்த மகள் கார்லோட்டே தான் என்னுடைய தொடர் உந்துதலாய் இருந்து வருகிறாள்” என்றும் பெருமிதமாய் சொல்கிறார் தத்ஜானா மரியா.

அவர் சொல்வதை போலவே தத்ஜானா வின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை பார்த்தால் அவருடைய மூத்த மகள் கார்லோட்டே தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து விளையாடும் வீடியோவும் , அவருடைய அம்மாவிற்காக கார்லோட்டே அளிக்கும் உற்சாகமும் பார்ப்பவர்களுக்கே அதி மகிழ்ச்சியை தருகிறது.
இப்படியாக விளையாடி வரும் தத்ஜானா மரியா, “குடும்பம் இருப்பதனால் ஒருத்தருடைய கனவுக்கோ வாழ்க்கைக்கோ எந்த விதமான இடையூறும் இல்லை” என்றும் கூறியுள்ளார்.
பவித்ரா
கங்குலி, ஜெய்ஷா பதவியில் தொடர அனுமதி!