இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்து தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
அதன்படி கடந்த 27, 28ஆம் தேதிகளில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று பல்லகெலே சர்வதேச மைதானத்தில் நேற்று (ஜூலை 30) இரவு நடைபெற்றது
இந்த போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக சுப்மன் கில் 39 ரன்களும், ரியான் பராக் (26), வாஷிங்டன் சுந்தர் (25) ரன்களும் குவித்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் குவிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 2 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 3 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.
இதன் மூலம் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது இந்தியா.
அதே நேரத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை (105 தோல்வி) படைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வங்காளதேசம் (104 தோல்வி), வெஸ்ட் இண்டீஸ் (101 தோல்வி) ஆகிய அணிகள் உள்ளன.
மேலும் இந்த போட்டியில் 25 ரன்கள் விளாசி, சூப்பர் ஓவர் உட்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!
பியூட்டி டிப்ஸ்: சமையல் பொருள்களைச் சருமத்தில் தடவுவது நல்லதா? கெட்டதா?
ஹெல்த் டிப்ஸ்: தினமும் வாழைப்பழம் சாப்பிடுபவரா நீங்கள்… உங்களுக்கு ஏற்ற பழம் எது?
வயநாடு : புதையுண்ட 3 கிராமங்கள்… பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு!