INDvsSL : கடைசி ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி கைப்பற்றியது.
அதன்பின்னர் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டி இரு அணிகளும் 230 ரன்கள் குவிக்க டை ஆனது. தொடர்ந்து நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3வது மற்றும் கடைசி போட்டியில் இன்று (ஆகஸ்ட் 7) கொழும்பு ஆர்.பி.எஸ் மைதானத்தில் இலங்கை அணியை எதிர்கொண்டது.
இந்திய அணியில் கே.எல்.ராகுல், அர்ஷ்தீப் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட், அறிமுக வீரராக ரியான் பராக் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் இலங்கை அணி கேப்டன் அசலன்கா.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான பதும் நிஷாங்கா (45) மற்றும் அவிஷ்கா பர்னாண்டோ இருவரும் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய குஷால் மெண்டிஸ் நிதானமாக விளையாட, அவிஷ்கா அரைசதம் அடித்தார். அவரையடுத்து அரைசதம் கடந்த குஷாலும் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
எனினும் அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவிஷ்கா 96 ரன்களில் பராக்கின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
கடைசி நேரத்தில் கமிந்து மெண்டிஸ் சிறிது ரன்கள் (23) குவிக்க இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அறிமுக வீரராக களம் கண்ட பாரக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், சிராஜ், அக்சர், சுந்தர் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக தொடக்க வீரர் சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ரோகித் – விராட் கோலி ஜோடி ஆட்டத்தை தங்களது பக்கம் கொண்டு வர போராடினர். எனினும் ரோகித் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட்(6), கோலி(20), ஸ்ரேயாஸ் அய்யர்(8), அக்சர் பட்டேல்(2), பராக்(15), துபே(9) ஆகியோர் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பொறுப்புடன் விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு துணையாக யாரும் ஆடாத நிலையில், இந்திய அணி 26.1 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த டுனித் வெல்லலகே தொடர் நாயகன் விருதையும், அவிஷ்கா பர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும் பெற்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆம்ஸ்ட்ராங் கொலை : கைதான அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல்!
செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்ப்படுத்தவில்லை என்றால்… : நீதிமன்றம் எச்சரிக்கை!