தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியைப் பெற்றது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்தன.
இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் நேற்று (நவம்பர் 13) இரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்ற நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அபிஷேக் – திலக் அபாரம்!
கடந்த போட்டியில் டக்அவுட் ஆன தொடக்க வீரர் சஞ்சு சாம்சன், மூன்றாவது போட்டியிலும் டக்அவுட் ஆகி சொதப்பினார்.
எனினும் அடுத்து கூட்டணி சேர்ந்த அபிஷேக் சர்மா – திலக் வர்மா ஜோடி அதிரடியாக ஆடினர். அபிஷேக் சர்மா 50 (25) ரன்களுடன் திரும்பிய நிலையில், திலக் வர்மா 107 (56) தனது சர்வதேச டி20யில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்து அசத்தியது.
டாப் பேட்ஸ்மேன்கள் சொதப்பல்!
தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் முன்னணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.
அதன்படி அவர்களின் டாப் பேட்ஸ்மேன்களான ரிகில்டன் 20 (15), ரீசா ஹென்ட்ரிக்ஸ் 21 (13), கேப்டன் மார்க்கரம் 29 (18), டிரிஸ்டன் ஸ்ட்பஸ் 12 (12), மில்லர் 18 (18) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினார்கள்.
இறுதிக்கட்டத்தில் ஹென்ட்ரி கிளாசன் 41 (22), மார்க்கோ யான்சன் 54 (17) ஆகியோர் அதிரடியாக ஆடினர்.
ஹர்திக் பாண்டியா வீசிய 19வது ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் குவித்தார் யான்சன்.
கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அர்ஸ்தீப் வெறும் 13 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்கள் மட்டுமே அடித்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை எடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில், 92 விக்கெட்களை எடுத்தார்.
இதன்மூலம் இந்திய அணிக்காக, சர்வதேச கிரிக்கெட்டில், அதிக விக்கெட்களை எடுத்த பந்துவீச்சளாராக அவர் உருவெடுத்துள்ளார். முன்னதாக புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி மற்றும் 4வது டி20 போட்டி நாளை ஜோஹன்பர்க்கில் நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 நியூஸ் : மருத்துவர்கள் வேலைநிறுத்தம் முதல் கங்குவா ரிலீஸ் வரை!
பயிர்க் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும்: முதல்வருக்குக் கடிதம்!
ஹெல்த் டிப்ஸ்: பழங்கள் மட்டும் சாப்பிட்டால் எடை குறையுமா?