தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி டர்பனில் நேற்று (நவம்பர் 8) இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் மற்ற வீரர்கள் சொதப்பிய நிலையில் அதிகபட்சமாக சஞ்சு சாம் 107 (50) ரன்களுடன் அதிவேக சதமடித்து அசத்தினார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், பீட்டர், மார்க்ரம் அடங்கிய ஸ்பின் கூட்டணி 8 ஓவர்களில் 79 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மிகப்பெரிய இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கிய நிலையில் முதல் ஓவரின் 4வது பந்திலேயே, கேப்டன் எய்டன் மார்க்கரத்தின் (8 ரன்கள்) விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார்.
மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 17.5 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் ஸ்பின்னர்களான வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் இருவரும் 8 ஓவர்களை வீசி அதில் 53 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்களை சாய்த்து தென்னாப்பிரிக்கா ஸ்பின்னர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என பாடம் நடத்தினர்.
தென்னாப்பிரிக்கா அணியை பந்தாடிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
போட்டியின் சாதனைகள் :
டர்பனில் இதுவரை டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோராக 191 ரன்கள் பதிவாகியிருந்த நிலையில், அதனை இந்திய அணி 202 முறியடித்து சாதனை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 போட்டியில் ரிலீ ரோசோவ் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிகபட்சமாக தலா 8 சிக்சர்கள் விளாசியிருந்தனர். அதனை 9 சிக்சர்கள் விளாசி சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார்.
டி20 போட்டி வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டாவது சதம் அடித்தவர்கள் பட்டியலில் குஸ்டாவ் மெக்கியோன், ரிலீ ரோசோவ், பில் சால்ட் ஆகியோரை தொடர்ந்து சஞ்சு சாம்சன் 4வது வீரராக இடம்பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2021 தேர்தல் கடன்… நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.எல்.ஏ… இவர் மட்டும்தானா?
TNPSC குரூப் 4: இன்னும் 13 நாள் தான்… ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி?
முக்கிய கட்சி நிர்வாகிகள் இருவரை சஸ்பெண்ட் செய்த திருமா