வருண் சக்கரவர்த்தி சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த போதிலும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது.
நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
கடந்த 8ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் சஞ்சு சாம்சனின் அபார சதத்தால் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
தொடர்ந்து கெபெர்ஹாவில் நேற்று (நவம்பர் 10) இரவு நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன்(0), அபிஷேக் சர்மா(4) மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ்(4) பேட்டிங்கில் சொதப்பினர்.
எனினும் அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா (39), அக்சர் பட்டேல் (27) மற்றும் திலக் வர்மா (20) ஆகியோரின் பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் 120ஐ தாண்டியது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 125 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடியது.
எனினும் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க வீரர்கள் ரன் குவிக்க திணறியதோடு அடுத்தடுத்து விக்கெட்களையும் பறிகொடுத்து வந்தனர்.
இதனால் ஒரு கட்டத்தில் 66 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தென்னாப்பிரிக்க அணி தடுமாறியது.
எனினும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கடைசி கட்டத்தில் கோட்ஷியின் அதிரடி பேட்டிங்கால் 19 ஓவர்களிலேயே 128 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா அணி.
இந்திய அணி தரப்பில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி சிறந்த பந்துவீச்சை (17 ரன்கள் – 5 விக்கெட்டுகள்) பதிவு செய்தார்.
எனினும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை சந்திக்க திணறிய நிலையில், முக்கிய சுழற் பந்துவீச்சாளரான அக்சர் பட்டேலுக்கு கடைசி ஓவர்களில் பந்துவீச சூர்யாகுமார் யாதவ் வாய்ப்பு வழங்காதது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடி – யில் பணி!
சென்னை மலர் கண்காட்சிக்கு குன்னூரில் தயாராகும் 45,000 நாற்றுகள்!