இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோனஸ்பர்க் மைதானத்தில் இன்று (டிசம்பர் 14) இரவு 8:30 மணிக்கு நடைபெறுகிறது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
அதன்படி முதலில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது.
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டி இடைவிடாது பெய்த கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
பின்னர் 12ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியுடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனால் இன்று இரவு ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ள மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி களமிறங்குகிறது.
யார் யாருக்கு வாய்ப்பு உள்ளது?
கடைசி டி20 போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் டக்அவுட் ஆகி வெளியேறியது பார்க்கப்பட்டது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் கில்லுக்கு பதிலாக ருத்துராஜ் கெய்க்வாட் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு உள்ளது.
அதேபோல் கடந்த டி20 தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது வீரர் திலக் வர்மாக்கு பதிலாக அணிக்கு திரும்பவும் வாய்ப்பு இருக்கிறது.
பவுலிங்கை பொறுத்தவரை குல்தீப் யாதவுக்கு பதில் டி20 நம்பர் 1 வீரர் ரவி பிஸ்னோய் களமிறங்க வாய்ப்புள்ளது.
ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பது உறுதி!
தென்னாப்பிரிக்காவிடம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டி20 தொடரில் தோற்றதில்லை. அதனால்இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணி முனைப்புடன் போராடும்.
அதே வேளையில் முன்னிலை வகிக்கும் ஏய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற நிச்சயம் போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பது உறுதி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை சர்வதேச திரைப்பட விழா: 126 படங்கள்… ரூ. 7 லட்சம் பரிசு!
நாமக்கல்லில் இருந்து அயோத்திக்குச் செல்லும் ஆலய மணிகள்!