இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகள் இடையிலான டி 20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.
அடுத்ததாக இரண்டு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஜோகன்னஸ் பெர்க்கில் இன்று (டிசம்பர் 17) இந்திய நேரப்படி 1.30 மணிக்கு தொடங்கியது.
இதில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு முதல்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல், ருத்துராஜ் துவக்க வீரர்களாகவும், சாய் 3-வது வீரராகவும் களமிறங்குகின்றனர்.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டோனி டே சோர்சி களமிறங்கினர்.
தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 4-வது பந்தில் ஹென்ட்ரிக்ஸ் விக்கெட்டை எடுத்தார்.
தொடர்ந்து ஒன் டவுனாக இறங்கிய ராஸி வான் டேர் டஸ்ஸனும் அவருடைய 5-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இருவருமே அடுத்தடுத்து டக் அவுட் ஆகியதால், அந்த அணி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
என்றாலும் அடுத்ததாக இறங்கிய கேப்டன் எய்டன் மார்க்ரம், டோனி டே சோர்சியுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க சற்று போராடினார்.
ஆனாலும் பயன் இல்லை. போட்டியின் 8-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் 5-வது பந்தில் டோனி டே சோர்சி(28) விக்கெட்டை எடுத்து மீண்டும் ஒருமுறை அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
தொடர்ந்து 10-வது ஓவரின் கடைசி பந்தில் கிளாசன் 6 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் போல்டாகி வெளியேறினார். 11-வது ஓவரின் முதல் பந்தில் மார்க்ரம் (12) விக்கெட்டை ஆவேஷ் கைப்பற்றினார்.
தொடர்ந்து அடுத்த பந்திலேயே முல்தர்(0) விக்கெட்டையும் ஆவேஷ் எடுத்தார். ஆவேஷின் ஆவேசம் அத்துடன் அடங்கவில்லை. 13-வது ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்களில் இருந்த அபாயகரமான மில்லரையும் வெளியேற்றினார்.
அடுத்ததாக 17-வது ஓவரின் முதல் பந்தில் 4 ரன்களுடன் இருந்த, கேசவ் மகாராஜ் விக்கெட்டையும் ஆவேஷ் கைப்பற்றினார்.
நீண்ட நேரம் களத்தில் போராடி சற்றே ஓவர்களை கடத்திய பெலக்வாயோ 33 ரன்களில் இருந்த போது 26-வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப், அவரை முதல் பந்திலேயே எல்பிடபிள்யு செய்து பெவிலியன் அனுப்பினார்.
கடைசி விக்கெட்டை அர்ஷ்தீப் அல்லது ஆவேஷ் இருவரில் ஒருவர் கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்ப்ரைஸ் ஆக குல்தீப், பர்கர் விக்கெட்டை எடுத்து முதல் பாதியை சுபமாக முடித்து வைத்தார்.
முடிவில் 27.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
India bowled out South Africa for their lowest total in Pink ODI under KL Rahul's captaincy…!!! pic.twitter.com/GPqEoCviRb
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 17, 2023
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மார்பக புற்றுநோய் விழிப்புணர்விற்காக பிங்க் ஜெர்சியில் களமிறங்கி உள்ளது.
பிங்க் ஜெர்சி அணிந்து அந்த அணி விளையாடிய 11 போட்டிகளில் 9 போட்டிகளில் வென்றுள்ளது. பிங்க் ஜெர்சியில் அந்த அணியின் மிகக்குறைந்த ஸ்கோர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அணி விவரம்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் (அறிமுகம்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.
தென் ஆப்பிரிக்கா அணி விவரம்:
ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டோனி டே சோர்சி, ராஸி வான் டேர் டஸ்ஸன், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹெயின்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்தர், அன்டிலே பெலக்வாயோ, கேசவ் மகாராஜ், நன்ரே பர்கர், தப்ரைஸ் சம்சி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
4 மாவட்டங்களில் விடாமல் பெய்யும் கனமழை: விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை!
2 நாட்களுக்கு மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு?