இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை லீக் போட்டி நாளை (ஜூன் 9) நடைபெற உள்ள நிலையில், இந்தியா பெரிய தவறை செய்வதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் எச்சரித்துள்ளார்.
கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் நாள்தோறும் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கத்துக்குட்டி அணிகளாக கருதப்படும் அமெரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் பெரிய அணிகளுக்கே அதிர்ச்சி அளித்து வருவது போட்டியில் சுவாரசியத்தை கூட்டியுள்ளது.
குறிப்பாக இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அதற்கு அடுத்த இடங்களில் அயர்லாந்து அணியை தனது முதல் போட்டியில் வென்ற இந்தியாவும் கனடாவும் உள்ளது. அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் அதிர்ச்சி தோல்வி கண்ட பாகிஸ்தான் 4வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி நாளை இரவு 8 மணிக்கு நியூயார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பலத்த கவனம் பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான கம்ரன் அக்மல், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை விமர்சித்து எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அந்நாட்டு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரியாக இல்லை என்று நான் நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் இணைந்து விராட் கோலியை ஓபனிங் வீரராக அனுப்புவது பிசிசிஐ செய்துள்ள மிகப்பெரிய தவறு.
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓபனிங் வீரராக களமிறங்கிய தடுமாறிய கோலி, 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
எனவே அவரை 3வது பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும். இதனால் அவர் இன்னிங்ஸில் நங்கூரமிட்டு மிடில் ஓவர்களில் சிறப்பாக விளையாடி அணியை வழிநடத்த முடியும்.
மேலும் போட்டியில் அழுத்தம் ஏற்படும் போது, அவர் 3வது வீரராக இறங்கி விளையாடுவது இந்தியா அணிக்கு மிகவும் முக்கியமானது. கோலிக்கு பதிலாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறக்க வேண்டும்” என்று அக்மல் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு இந்திய அணி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். கோலி தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாகவே விளையாடியுள்ளார் என்றும், ஐபிஎல் தொடரில் பலகாலமாக தொடக்க வீரராக களம் கண்டு பலமுறை ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, 154 ஸ்டிரைக் ரேட்டில் 741 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நாளை நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய அதே பேட்டிங் வரிசையை தொடரவே இந்திய அணி முடிவு செய்துள்ளது.
இந்த போட்டியுடன் இரண்டாவது வெற்றி பெற இந்தியா அணி முயற்சிக்கும் அதே வேளையில், அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட பாகிஸ்தான் அணி வெற்றிக்காக போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஐஎம்டிபி டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் சமந்தா… என்ன சொன்னார் தெரியுமா?
ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஜேசிடி பிரபாகர்.. உருவானது ’அதிமுக ஒருங்கிணைப்புக் குழு’!