கடும் நெருக்கடிக்கு இடையே புனேயில் இன்று (அக்டோபர் 24) காலை தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
கடந்த வாரம் பெங்களூரு எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது நியூசிலாந்து அணி.
இதன்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து வரலாறு படைத்தது.
அதே வேளையில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளைப் பெற்று இந்தியாவின் வீறுநடைக்கும் நியூசிலாந்து அணி முற்றுப்புள்ளி வைத்தது.
அதுமட்டுமல்ல, அடுத்தடுத்த வெற்றியால் வசமாகி வந்த இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவிலும் நியூசிலாந்து கல்லெறிந்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுற்றாலும், இதுவரை 12 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று WTC புள்ளி பட்டியலில் இந்தியா 98 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
நெருக்கடியில் இந்தியா!
WTC இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா இருந்தது.
ஆனால் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒருவேளை தோல்வி அடைந்தால் அடுத்ததாக விளையாட உள்ள 6 டெஸ்ட் போட்டிகளில், , 4ல் வெற்றியும், 2 போட்டியை டிரா செய்தால் மட்டுமே 56 புள்ளிகளுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக மீதமுள்ள ஒரு போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட சவாலான தொடரில் விளையாட உள்ள இந்திய அணிக்கு அது பெரும் நெருக்கடியாக அமையும் என கருதப்படுகிறது.
கே.எல்.ராகுல் நீக்கம்!
இந்த நிலையில் தான் புனேவில் இன்று நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
தற்போது நியூசிலாந்து அணி டாஸ் வென்றுள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை மூத்தவீரர் கே.எல்.ராகுலுக்கு பதிலாக கடந்த போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்த சர்ப்ராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் களமிறங்குகின்றனர்.
நியூசிலாந்து அணியில் மேட் ஹென்ரிக்கு பதிலாக சாண்ட்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிளெயிங் அணி விவரம்!
இந்தியா
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா
நியூசிலாந்து
டாம் லாதம்(கேப்டன்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல்(விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், டிம் சவுத்தி, மிட்செல் சான்ட்னர், அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓர்கே
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எடப்பாடியின் வலதுகரம்… 3வது நாளாக தொடரும் ஐடி சோதனை!
பிக் பாஸ் சீசன் 8 : சவுந்தர்யா vs ஜாக்குலின்… பாடி ஷேமிங் செய்வது நியாயமா?